- செய்திகள், விளையாட்டு

கோலியின் அதிரடி தொடருமா?

 

பெங்களூரு, ஏப்.12:-

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 4-வது ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 9-ம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்று சந்திக்கின்றன.

பெங்களூரு அணியைப் பொருத்தவரை இதுவரை பட்டம் வென்றதில்லை. இதுவரை 2009 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் இறுதிச் சுற்றுவரை சென்று இறுதிச் சுற்றில் பட்ட வாய்ப்பை இழந்துவிட்டது.

ஆக இந்த முறை எப்படியும் பட்டம் வெல்ல வேண்டும் என்ற துடிப்பில் அந்த அணி களம் இறங்கும்.
பெங்களூரு அணி, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட விராட் கோலி தலைமையில் களம் காணுகிறது. விராட் கோலி அந்தப் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி இந்திய அணியை அரை இறுதிக்கு அழைத்துச் சென்றார். அத்தோடு அரை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவினாலும் கூட விராட் கோலி அதிரடியாக ஆடி ஆட்டமிழக்காமல் 89 ரன்களைக் குவித்தார். உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் கோலி உலக கோப்பை போட்டியில் 273 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக அவரது தொடர் அதிரடி ஆட்டம் பெங்களூரு அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும்.

மேலும் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல், தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் உள்ளிட்ட அதிரடி ஆட்டக்காரர்களையும் கொண்டுள்ளது பெங்களூரு அணி.

சர்வதேச போட்டிகளில் சமீபத்தில் ஓய்வு பெற்ற வாட்சன் தனது ஆல் ரவுண்டர் திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளார். ஐபிஎல் போட்டியில் ரூபாய் 9.5 கோடிக்கு ஏலம் போனதால்தான் அதற்கு தகுதியானவர் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

மேலும் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள பின்னி, மன்தீப் சிங் இருவரும் ஐபிஎல் போட்டியில் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற துடிப்போடு களம் இறங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் பந்து வீச்சாளர் சாமுவேல் பட்ரீ சில போட்டிகளில் களம் இறங்குவது  சந்தேகம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பத்ரி களம் இறங்காவிட்டால், யஜ்வேந்திர சஹால் களம் இறங்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.  கடந்த ஐபிஎல் போட்டியில் இவர் 15 விக்கெட்டுகளையும் 14-ம் ஆண்டுக்கான போட்டியில் 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சைன் ரைசர்ஸ் அணியைப் பொருத்தவரை டேவிட் வார்னர், மோர்கன், கனே வில்லியம்ஸ் ஆகிய சிறந்த பேட்ஸ் மேன்கள் உள்ளனர். இந்திய வீரர் யுவராஜ் சிங் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார் என்றாலும் இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் இடம் பெறமாட்டார் என்பது ஏற்கெனவே தெரிவிக்கப்படடுள்ளது. மேலும் வேகப் பந்து வீச்சாளர் நெஹ்ராவும் இந்த அணயில் உள்ளார்.

பெங்களூரு அணி வலுவான அணியாகத் திகழ்ந்தாலும் கிரிக்கெட்டைப் பொருத்தவரை பல நேரங்களில் வலுவான அணி  சாதாரண அணியிடம் வீழ்ந்த வரலாறுகள் இருக்கத்தான் செய்கிறது என்பது நினைவு கூரத்தக்கது.

Leave a Reply