- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்; வாய்ப்பு வந்தால் பாடுவேன்

சென்னை, மார்ச்-30

கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன். வாய்ப்பு வந்தால் நிச்சயம் மறுபடியும் பாடுவேன் என்று பிரபல பின்னணி பாடகி பி.சுசிலா கூறினார்.

கின்னஸ் சாதனை

பிரபல பின்னணி பாடகி பி.சுசிலா அதிக தனிப்பாடல்கள் பாடியதற்காக உலக சாதனையை குறிக்கும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார். இதுவரை 17 ஆயிரத்து 695 தனிப்பாடல்களை பாடியதற்காக அவருக்கு இந்த கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

1950-ம் ஆண்டு சென்னை வானொலி நிலையத்தில் `பாப்பா மலர்' என்ற நிகழ்ச்சி வழங்கி வந்த பி.சுசிலாவின் குரலில் ஈர்க்கப்பட்ட டைரக்டர் கே.எஸ்.பிரகாஷ்ராவ், தனது இயக்கத்தில் அப்போது உருவான `பெற்ற தாய்' படத்தில் அவரை பாட வைத்தார். அதுமுதல் 2016-ம் ஆண்டுவரை பி.சுசிலா பாடிய தனிப்பாடல்கள் இதுவரை உலகில் எந்த பாடகியும் செய்திராத சாதனை.

பெரிய கவுரவம்

கின்னஸ் விருது கிடைத்த மகிழ்ச்சியில் பி.சுசிலா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

2003-ம் ஆண்டில் தேன்ராஜா, ராஜேஷ் ஆகியோர் தான் என் பெயரில் ஒரு இணையதளம் தொடங்கினார்கள். கலைக்குமார் என் பாடல்களை சேகரித்தார். அவருடன் ஐந்தாறு பேர் இணைந்து என் பாடல்களை சேகரிக்கத் தொடங்கினார்கள். அதன்பிறகே எனக்கு இந்த கவுரவம் கிடைத்திருக்கிறது. எல்லோருக்கும் இது போன்ற கவுரவம் கிடைக்காது. கஷ்டப்பட்டு பாடியதற்காக, 24 மணிநேரம் உழைத்ததற்காக இந்த விருது கிடைத்ததாக நினைக்கிறேன். இது பெருமை அளிக்கிறது. என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்த என் பெற்றோருக்கும், கடவுளுக்கும், தங்கமான என் ரசிகர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏ.எம்.ராஜாவுடன் நான் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறேன். ரெக்காரடிங் ஸ்டூடயோவில் அப்பால்ராஜ், சாந்த் இருவரும என்பாட்களை முதலில் பதிவு செய்தவர்கள். அந்த பாடலை கேட்டுத்தான் ஏவி.மெய்யப்ப செட்டியார் எனக்கு பாட வாய்ப்பு தந்தார். பாடும்போது எனக்கு தமிழ் உச்சரிப்பை சொல்லித் தந்தவரும் அவரே. அவரால் தான் நான் புகழ் பெற்றேன்.

தொடர்ந்து பாடுவேன்

எந்த பாடலையும் சரியாக பாடினாலே அது சவால் தான். ஒரு பாடலை பாட அதிகமுறை பயிற்சி எடுப்பேன். சில பாடல்களுக்கு ஒரு மாதம் கூட பயிற்சி எடுத்திருக்கிறேன். என் கணவர் டாக்டர் என்பதால் அதிக அக்கறை எடுத்து என்னை கவனித்தார். எம்.எஸ்.வி. சார் இசையில் `உயர்ந்த மனிதன்' படத்துக்காக `நாளை இந்தவேளை காற்றில் ஆடிவா நிலா' பாடலை அவரது இசையில் நான் பாடினேன். அப்போது  அவர், `இந்த பாடலுக்கு உனக்கு தேசிய விருது கிடைக்கும்' என்றார். அவர் சொன்னபடியே நடந்தது.

நான் பாடகி மட்டும்் தான். `மனதை திருடி விட்டாய்' படத்தில படம் சம்பந்தப்பட்டவர்கள் கேட்ட அன்புக்காக ஒரு காட்சியில் பாடகியாகவே தோன்றினேன். மற்றபடி ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன். அதேசயம் இப்போதும் வாய்ப்பு வந்தால் பாடத் தயாராகவே இருக்கிறேன். இசையமைப்பார்களின் இசையமைப்பில் நான் பாடிய பாடல்களுக்கு திரையில் உயிர் கொடுத்த அத்தனை நட்சத்திரங்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

இவ்வாறு  பி.சுசிலா கூறினார்.

Leave a Reply