- செய்திகள்

கொடைக்கானலில் காட்டு யானைகள் அட்டகாசம் 2 வீடுகளை இடித்து சேதப்படுத்தியது…

கொடைக்கானல்,ஜூலை.27-
கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களாக யானைகள் இடம் பெயர்ந்து குடியிருப்பு பகுதிகளையும், விளை நிலங்களையும் சேதப்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது.
காட்டு யானைகள் அட்டகாசம்
கோடை காலங்களில் மட்டுமே யானைகள் மற்றும் வன விலங்குகள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தண்ணீரை தேடி அங்கும் இங்கும் அலையும். சில சமயங்களில் ஊருக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்யும். ஆனால் தற்போது மழைக்காலத்திலும் யானைகள் இடம் பெயர்ந்து வருவது விவசாயிகளை பீதி அடைய வைத்துள்ளது. மலைக் கிராமங்களான பள்ளங்கி, கோம்பை, பேத்துப்பாறை, அஞ்சுரான்மந்தை, புலிகுத்திகாடு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
மக்கள் அச்சம்
இதனால் மலை கிராம மக்கள் உடமைகளை இழந்து உயிருக்கு பயந்து வேறு இடங்களை நோக்கி நகர தொடங்கி உள்ளனர். மேலும் விளை நிலங்களும் பாதிக்கப்படுவதால் வாழ்வாதாரங்களை இழந்து மாற்று தொழிலை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு பள்ளங்கி பகுதியில் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த 2 வீடுகளை இடித்து தள்ளின. இதில் சுவர்கள் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் உயிர் தப்பினர்.

விரட்டப்படும்
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. யானைகளின் தொடர் அட்டகாசத்தை தடுக்க நாளை (அதாவது இன்று) 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஒன்று சேர்ந்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக வனத்துறை ரேஞ்சர் ‌ஷர்மா தெரிவித்தார்.

Leave a Reply