- மாவட்டச்செய்திகள்

கொடநாடு எஸ்டேட்டுக்கு வர சசிகலாவுக்கு எதிர்ப்பு ஊட்டி கோர்ட்டில் விவாதம்

கொடநாடு எஸ்டேட்டுக்கு வர சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணையின்போது விவாதம் நடைபெற்றது.

கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் சயன், மனோஜ் உள்பட 5 பேர் ஆஜர் ஆனார்கள்.

மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாசலம் முன்னிலையில் நடந்த இந்த விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆனந்தன், பெங்களூர் ஜெயிலில் இருந்து விடுதலையாகி உள்ள சசிகலா, விரைவில் கொடநாடு எஸ்டேட்டுக்கு வந்து தங்க உள்ளதாகவும், அதற்காக கொடநாடு எஸ்டேட் பங்களாவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே கொடநாடு எஸ்டேட் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சூழலில் அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வக்கீல் பாலநந்தகுமார், தற்போதைய சூழலில் இந்த பிரச்சினை குறித்து பேச வேண்டியது இல்லை என்றார். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Leave a Reply