கையில் திருக்குறள் ஏந்திய காவல் திலகம் நூற்றாண்டு காணும் எஸ்.எம்.டயஸின் ஈடற்ற தொண்டு..! ~ ஒளவை அருள்

 இந்தியக் காவல்துறைப் பணியில் சேரும் அலுவலர்களுக்குப் பயிற்சியளிக்கும் சர்தார் வல்லபபாய் படேல் தேசிய காவல் பயிற்சி மையத்தின் முதல் இயக்குநராக விளங்கிய எஸ்.எம்.டயஸ் அவர்களை இன்றைய சமுதாயத்தின் இளைய தலைமுறையினர் அறிந்திருக்க மாட்டார்கள். தன்னுடைய தளராத உழைப்பினாலும் கடமை உணர்ச்சியினாலும் கலை இலக்கிய ஆர்வத்தினாலும் பேராசிரியச் சிந்தனையோடு புகழோடு வாழ்ந்தார் . 

எஸ்.எம்.டயஸ் 1919-ம் ஆண்டு மணப்பாடு என்னும் சிற்றூரில் பிறந்தார். திருச்சிராப்பள்ளியில் வரலாறு படைக்கும் புனித வளனார் கல்லூரியில் கணிதம் பயின்றார். அந்நாளில் சிறப்புக் கல்வியான கணக்குத் துறையில் ஆனர்ஸ் படிப்பை முடித்த பின்னர், அதே கல்லூரியில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றினார்.  கணிதப் பாடத்தை ஆங்கிலத்தில் எளிமையாகவும் – இனிமையாகவும் கற்றுத்தந்த வல்லமையைப் பலர் பாராட்டினர். புனித வளனார் கல்லூரியை அலங்கரிக்கும் பழங்காலப் புகைப்படங்களில் இளமைப் பொலிவும் மிடுக்கும் வாய்ந்த விரிவுரையாளராக  எஸ்.எம்.டயஸ் ஒளிப்படத்தைச்  சிலரேனும் கண்டிருக்கலாம்.

பள்ளிப்பருவத்தில் தேசிய மாணவப் பயிற்சிப் படையில் அங்கம் வகித்தார். பின்னர்,  தற்போதைய தேசிய மாணவர் பயிற்சிப் படைக்கு நிகரான முந்தைய காலப்  பல்கலைக் கழக அலுவலர் பயிற்சிப் படைப் பிரிவுக்கு அதிகாரியாக இருந்தார். புனித வளனார் கல்லூரியில் சில ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்து, அதன் பின்னர் 1940 – 1949-ம் ஆண்டு வரையில் டேராடூன் இராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சியளிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

இந்திய நாடு விடுதலை அடைந்த பின்னர்,  ஆங்கிலேயர் இந்தியாவை விட்டுச் சென்றவுடன், போதிய அளவில் காவல் அதிகாரிகள் இல்லை. எனவே, இந்திய அரசு, காவல் படையினருக்குச் சிறப்புத் தேர்வை நடத்தியது. அத்தேர்வில் எஸ்.எம்.டயஸ் இந்தியக் காவல் பணி அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த உடல் வளம் , உயரமான தோற்றம், பாடங்களில் பெற்றிருந்த புலமை மற்றும் இராணுவப் பள்ளியில் பெற்ற படைப் பயிற்சி ஆகியவற்றை பின்புலமாகக் கொண்டதால், அவருக்கு இந்தியக் காவல் பணியில் சேர்ந்தது பிடித்தமான பணியாகப் பொருந்தியது. அப்போதைய மதறாஸ் மாகாணம் அவர் அலுவலுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சிவகாசி நகரில் உதவிக் காவல் துறை கண்காணிப்பாளராகவும், மதுரை காவல் துறைக் கண்காணிப்பாளராகவும், குற்றப் புலனாய்வுத் துறை தனிப்பிரிவிலும் பணியாற்றினார். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சியிலும், பின்னர் சென்னையில் குற்றப் புலனாய்வுத் துறையில் காவல் துறை துணை ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர், தமிழ்நாடு சிறைச்சாலைகள் துறையின் தலைவராகவும் பணிபுரிந்தார். அதன் பிறகு 1974-ம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து மவுண்ட் அபுவில் உள்ள தேசிய காவல் பயிற்சிப் படைக்குத் தலைவராக அமர்த்தப்பட்டார் .

தமிழ்நாட்டில் பணியில் இருந்த போது, பொதுமக்களாலும், அரசியல்வாதிகளாலும் சிறந்த பாராட்டைப்பெற்றார். முன்னாள் முதலமைச்சர் காமராசர் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கன் ஆகியோருடைய  போற்றுதல் எப்போதும் இருந்தது. அவர் எங்குப் பணிபுரிந்தாலும், மக்களின் பாராட்டைப் பெற்று,  மக்களின் காவல் நண்பராகக்  கருதப்பட்டார். பொதுமக்களுக்கான சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த திட்டம் மற்றும் திட்டப்பணிகள் அமைப்பு இன்றும் சிறப்பு வாய்ந்ததாக காவல் துறையால் கருதப்படுகிறது.

எஸ்.எம்.டயஸ் சிறந்த எழுத்து வன்மையும் திறமையும் கொண்டவர் . காவல் துறையில்  துணைக் கண்காணிப்பாளரான பங்கிராஸ் என்பவருடன் சேர்ந்து, காவல் துறை சார்ந்த பொருண்மைகள் தொடர்பாக காவல் துறை சார்ந்த இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ்நாட்டுக் காவல் துறையில் சிறப்பாகத் தலைமை பணியாற்றிய மோகன் தாஸ் மற்றும்  ஸ்ரீபால் போன்ற அன்றைய இளம் காவல் துறை அதிகாரிகளுக்கு அந்நாளில் அவர் உந்துசக்தியாக விளங்கினார்.

எஸ்.எம்.டயஸ் அவர்களின் பெருமுயற்சியால்தான், மவுண்ட் அபுவில் இருந்த பயிற்சி மையம் ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் பட்டேல் தேசிய காவல் பயிற்சி மையமாகத் தோற்றம் பெற்று முதல் இயக்குநரானார். நான்காண்டுகள் பயிற்சி மையத்தின் இயக்குநராக இருந்த அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுச்  சென்னைக்குத் திரும்பினார்.

தமது 72-ம் வயதில் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.  சென்னைப் பல்கலைக் கழகத்தில் உள்ள ஓர் அரங்கத்திற்கு “ டயஸ் அரங்கம் ” என அவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்பு அவர் தலைவராக  இருந்த ஐதராபாத் காவல் பயிற்சி மையத்தில் உள்ள காவல் துறை அதிகாரிகளிடையே உரையாற்றுவதற்குச் சென்ற போது அங்கு அவர் காலமானார்.

அவருடைய வாழ்வில் ஒளிமிகுந்த ஒரு வாய்ப்பாக அருட்செல்வர் அலுவலகத்தில் ஓர் ஆலோசகராகப் பணிக்கு வரலானார். அருட்செல்வருக்கு எவரிடம் எந்தத் திறமை புதைந்திருக்கிறது என்பதைக் கண்டறியும் மாபெரும் திறமை இருந்தது. கனக்குப் புலமையும் கல்வித் திறமையும் காவல் துறையில் பெற்றிருந்த கண்காணிப்புப் பெருமையும் ஒருங்கே குவிந்த நிலையில் அவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அரும்பணியை ஆய்வுப்பணியாக மேற்கொண்டார் .

பரிமேலழகர் உரைத்தெளிவு –  போப் பெருமகனார் மொழிபெயர்ப்புத் திறம் தாமே கண்டறிந்த சிந்தனை வளம் – இவையெல்லாம் சேர்ந்த வகையில் ஒப்பற்ற மொழிபெயர்ப்பாகவும் உரை விளக்கமாகவும் திருக்குறள் உரை ஆங்கிலத்தில் அருட்செல்வரால் வனப்பாக வெளியிடப்பெற்றது. உலகமெங்கும் எஸ்.எம்.டயஸ் உரையைப்  பரப்பியதோடு  அண்மைக்காலத்தில் ஐம்பதாண்டுகளுக்குள் வந்த அறிவார்ந்த படைப்பாக பத்துக்கு மேற்பட்ட பதிப்புகளை ஐந்தாயிரம் படிகளுக்கு மேல் சிறப்புடையதாக இந்த உரை விளக்கம் அமைந்துள்ளது .

பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கர் உரை விளக்கங்களையும் – சங்க இலக்கியங்கள் – பெருங் காப்பியங்கள் – பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் முதலிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வ.வே.சு.ஐயர், இராஜாஜி, கே.எம்.பாலசுப்ரமணியம், அறிஞர் சீனிவாசன் முதலிய அறிஞர்களின் ஆக்கத்திலும் தோய்ந்து, பகவத் கீதை, குரான், விவிலியம் முதலிய அருள் நூல்களையும் மேலை அறிஞர்களான பிளாட்டோ, மாக்கியவல்லி, சாணக்கியர் முதலிய அறிஞர்களையுக் கற்ற  புலமையோடு ஒப்புமை காட்டியும் திருக்குறளுக்கு விரிவான விளக்கமாக அறிஞர் டயஸ் வழங்கிய நூலுக்கு அறிஞர் வா .செ குழந்தைசாமி சிறப்பான முன்னுரையை எழுதியுள்ளார்.

இந்நூலை அருட்செல்வர் காந்தியடிகள் நூலை வெளியிட்டுப் புகழ்கொண்ட வர்த்தமானன் பதிப்பகத்துக்கு வழங்கிய நிலையில் பன்னிரெண்டு பதிப்புகளைப் பதிப்பகம் பெருமிதமாக வெளியிட்டுள்ளது. அறிஞர் எஸ்.எம்.டயஸின் நூற்றாண்டுப் புகழுக்கு மணிமுடியாக இந்நூல் அமைகிறது .

இந்த ஆண்டு எஸ்.எம்.டயஸ் அவர்களை நினைவு கூரும் நூற்றாண்டாகத் திகழ்கிறது .

முனைவர் ந.அருள்,

இயங்குநர்

மொழிபெயர்ப்புத் துறை

தமிழ்நாடு அரசு 

தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

 

 

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *