- செய்திகள், மாநிலச்செய்திகள்

`கேரளாவை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்' மத்திய அரசுக்கு உம்மன் சாண்டி வலியுறுத்தல்

கொச்சி, ஏப்.28-

"கேரள மாநிலத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்க வேண்டும்" என  முதல்-அமைச்சர் உம்மன் சாண்டி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

உம்மன்சாண்டி பேட்டி

கேரள மாநில முதல்-அமைச்சர் உம்மன் சாண்டி கொச்சி பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கிடையே  நிருபர்களிடம் கூறியதாவது-

அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக்குழு கூட்டம் நாளை(இன்று) திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் நிலவி வரும் வரலாறு காணாத வறட்சி குறித்து விவாதிக்கப்படும்.  வறட்சி நிலை குறித்து நடவடிக்கைகள் எடுக்க அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி  பெற்றுள்ளது.

வறட்சி மாநிலமாக

வறட்சி மிகப்பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. நான் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு திருவனந்தபுரம் செல்கிறேன். அங்கு நாளை(இன்று) நடைபெற உள்ள உயர்மட்டக்கூட்டத்தில் கலந்துகொண்டு வறட்சி குறித்து ஆலோசிப்பேன்.

கேரள மாநிலத்தை வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும். தற்போது மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால்  மக்களின் மாமுல் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மம்முட்டி விருப்பம்

கேரள மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் வறட்சி நிவாரண நடவடிக்கைகளில் தாமும் கலந்துகொள்ள விரும்புவதாக நடிகர் மம்முட்டி என்னிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முதல்-அமைச்சர் உம்மன்சாண்டி கூறினார்.

Leave a Reply