- செய்திகள், மாவட்டச்செய்திகள்

கெயில் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் வைகோ கோரிக்கை

சென்னை, மார்ச். 10-
கெயில் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என்று வைகோ கூறினார்.
இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–-
வேதனை
இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்), கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு 871 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டத்தைச் செயல்படுத்த, கடந்த பிப்ரவரி 2-ந் தேதி உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து விட்டது.
தேசிய நெடுஞ்சாலை வழியாக…
உச்சநீதிமன்றம் கெயில் நிறுவனத்தின் திட்டத்துக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளதற்கு மத்திய-மாநில அரசுகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். கெயில் நிறுவனம் குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டங்கள் பல மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை வழியாகவே செயல்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, மத்திய அரசின் நிறுவனமான கெயில் இந்தியா, தமிழ்நாட்டில் 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை வழியாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். மத்திய அரசு இதற்கான மாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்தினால் உச்சநீதிமன்றம் குறுக்கே நிற்கப்போவது இல்லை.
மாற்றுப்பாதையில்
தமிழக விவசாயிகளின் கவலையைப் புரிந்துகொண்டு மாற்றுப் பாதையில் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் ஒட்டுமொத்த விவசாயப் பெருமக்களும் ஒன்று திரண்டு அறப்போரில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Leave a Reply