- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

கெயில் திட்டத்தில் விவசாயிகள் நலனை காக்கவேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை, மார்ச். 10-
கெயில் திட்டத்தில் விவசாயிகள் நலனை காக்கவேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
எதிர்ப்பு
கெயில் எரிவாயு திட்டத்தால் வரும் காலங்களில் 7 மாவட்டங்களைச் சார்ந்துள்ள சுமார் 2 ஆயிரத்து 500 விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தொழிலை இழக்க நேரிடும்.  எனவே இத்திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்திட வேண்டும் என்று, அப்பகுதி விவசாயிகள், விவசாய சங்கங்கள், த.மா.கா. உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்பை மத்திய அரசுக்கு பலமுறை வெளிப்படுத்தினர்.
மாற்றுப் பாதை
மேலும் அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கெயில் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது, இந்த வழக்கில் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பில் எரிவாயு திட்டத்தைச் செயல்படுத்த கெயில் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழக அரசு இந்தத் தீர்ப்பின் மீது மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தது. தற்போது இந்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
கோரிக்கை
எனவே கெயில் நிறுவனத்தோடு பேச்சு வார்த்தை நடத்தியும், சட்டத்திற்கு உட்பட்டும், நீதிமன்ற உத்தரவைப் பெற்றும் எரிவாயு குழாய் பதிப்பதற்கு மாற்று வழிப்பாதையை ஏற்படுத்தி, இத்திட்டத்தினை நிறைவேற்றிட மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழக அரசு இதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் நலன் காத்திட வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Leave a Reply