- அரசியல் செய்திகள்

கூட்டணி வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபடுங்கள் ப.சிதம்பரம் பேச்சு

கூட்டணி வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபடுங்கள் என காங்கிரஸ் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஒரு தனியார் விடுதியில் நகர வட்டார காங்கிரஸ் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்களை நகர தலைவர் பழனிவேல்ராஜன், வட்டாரத்தலைவர் ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனர்.

கூட்டத்தில் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.அருணகிரி, காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் பழனியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:-

பா.ஜனதா என்னும் விஷ செடி வளர விடாமல் தடுப்பணை போட வேண்டும். அதற்கு காங்கிரஸ் ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும். கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த ஒரு கோடி தொழிலாளர்கள் நடந்தே தங்கள் மாநிலங்களுக்கு சென்றனர். இது பா.ஜனதா ஆட்சியின் அவலம் அல்லவா?

ஊரடங்கினால் 12 கோடி பேர் வேலை இழந்து உள்ளனர். வேலை வாய்ப்பு நிறுவனத்தில் 2 கோடியே 80 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். பா.ஜனதா ஆட்சியால் 35 சதவீத குறு, சிறு தொழில்கள் மூடப்பட்டு உள்ளன. இதுவரை திறக்கப்படவில்லை. வருகிற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும்.

கொரோனா காலத்தில் அவசர தேவைக்காக வெளியே வந்தவர்கள் மீது வழக்கு போட்டதே தவறு. இப்போது அத்தனை வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளது நகைப்புக்குரியது. கடந்த 4 ஆண்டு காலமாக தூங்கி விட்டார் போல.

தற்போது ஆட்சி முடிய போகிற தருணத்தில் தேர்தலுக்காக அவசர, அவசரமாக புதிய திட்டங்களை அறிவிக்கிறார், எடப்பாடி பழனிசாமி. மக்களுக்கு தெரியும் இந்த ஆட்சியின் நிலை. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply