- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

கூட்டணி முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்த சந்திரகுமார் உள்பட 10 பேர் தே.மு.தி.க.வில் இருந்து நீக்கம்

சென்னை, ஏப்.6-
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக தே.மு.தி.க. கொள்கைபரப்பு செயலாளர் சந்திரகுமார், 3 எம்.எல்.ஏ.க்கள்,  மாவட்டச் செயலாளர்கள் உட்பட 10 பேர் கட்சியில் நீக்கப்பட்டதாக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்.
கட்சியைவிட்டு நீக்கம்

தே.மு.தி.க.வில் கூட்டணி தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தி தொடர்பாக அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ., சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். சந்திரகுமார் பேட்டி கொடுத்த சில மணி நேரத்திற்குள், அதிருப்தியாளர்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டார்.
இதுகுறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய முற்போக்கு திராவிட கழக கொள்கைபரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், துணைச்செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.எச்.சேகர், சேலம் மேற்கு மாவட்ட  செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜெ.விஸ்வநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் என்.கார்த்திகேயன், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் இமயம் என்.எஸ்.சிவகுமார், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பி.செந்தில்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட  பொருளாளர் செஞ்சி சிவா ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளனர்.
ஆகவே, அவரவர் வகித்து வந்த கட்சிப் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் இன்று (5-ந் தேதி) முதல் நீக்கப்படுகிறார்கள். இவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.
புதிய நிர்வாகிகள் நியமனம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட  பொறுப்பாளராக ஏ.வி.ஆறுமுகம் (கவுன்சிலர்) (மாவட்ட கழக அவைத்தலைவர்), திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக பாபு முருகவேல் எம்.எல்.ஏ, வேலூர் மத்திய மாவட்ட  பொறுப்பாளராக ஸ்ரீதர் (முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர்), சேலம் மேற்கு மாவட்ட  பொறுப்பாளராக பி.ஆனந்தபாபு (கழக மாணவரணி துணைச்செயலாளர்), ஈரோடு வடக்கு மாவட்ட  பொறுப்பாளராக பி.கே.சுப்பிரமணி ( நெசவாளர் அணி செயலாளர்), ஈரோடு தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பா.கோபால் (மாவட்ட  துணைச்செயலாளர்) ஆகியோர் இன்று (5-ந் தேதி) முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு அந்தந்த மாவட்ட, பகுதி, ஒன்றிய,  நகர, பேரூர், வட்ட, கிளை கழக, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து கட்சி சிறப்பான வளர்ச்சிபெற பாடுபடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறி உள்ளார்.

Leave a Reply