- செய்திகள்

கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தது தமிழக அரசு ஜல்லிக்கட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தில்…

புதுடெல்லி, ஆக.25-

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு குறித்த வழக்கில் தமிழக அரசு நேற்று கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தது.

ஜல்லிக்கட்டுக்கு தடை

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளையை நீக்கி மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது.

மறுசீராய்வு மனு

இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வக்கீல் வாதிட்டார். மேலும், தமிழகத்தில் பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது என்றும், தமிழகத்தின் கலாசாரத்தில் ஜல்லிக்கட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு எனவும் அவர் கூறினார்.

இதையடுத்து ஜல்லிக்கட்டுத் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டனர்.

கூடுதல் ஆவணங்கள் தாக்கல்

இந்தநிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு நேற்று கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 500 பக்கங்கள் கொண்ட இந்த 4 ஆவணத் தொகுப்பில் ஜல்லிக்கட்டு தொடர்பான பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

2012, 2013 மற்றும் 2014-ல் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளின் விவரங்கள், உச்ச நீதிமன்ற நிபந்தனைகளுடன் நடந்த போட்டிகளின் விவரங்கள், 2014-க்கு பிறகு ஜல்லிக்கட்டு மாடுகளின் நிலைமை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அனுமதிக்க வேண்டும்

மேலும், உரிய வழிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக வழிமுறைகள் வகுக்கப்படும்போது அதனை முழுமையாக ஏற்க தமிழக அரசு தயார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply