- மாவட்டச்செய்திகள்

குற்றாலம் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

வங்கக்கடலில் வீசும் வலுவான கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நெல்லையில் களக்காடு, நாங்குநேரி, பாளை, அம்பை உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது லேசான சாரல் பெய்தது. கடந்த 2 நாட்களாக அணைப்பகுதிகளான பாபநாசம், சேர்வலாறு அணைப்பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது.

நேற்றுக் காலை நிலவரப்படி பாபநாசத்தில் 7 மில்லி மீட்டரும், சேர்வலாறு அணைப்பகுதியில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 121.45 அடியாக உள்ளது.

கோம்பையாறு, தலையணை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று இரவு மட்டும் சிவகிரி பகுதியில் அதிகபட்சமாக 65 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைப்பகுதிகளான கடனா, கருப்பாநதி, ராமநதி, குண்டாறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தொட்டப்படி தண்ணீர் கொட்டியது.

இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் 5 கிளைகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பழைய குற்றாலம் அருவி, புலியருவிகளிலும் அதிக அளவு தண்ணீர் விழுந்தது.

Leave a Reply