- செய்திகள்

குற்றாலம் அருவியில் குளிக்கத்தடை…

 

குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:குற்றாலத்தில் கடந்த ஜூன் மாதம் 2-வது வாரத்தில் சீசன் தொடங்கியது. சீசன் தொடங்கிய சில நாட்களாக அணைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அவ்வப்போது அருவிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு வந்தது.வாரந்தோறும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குற்றாலத்தில் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று குளித்து வந்தனர். எனினும் கடந்த ஆண்டை போல சீசன் களை கட்டவில்லை. கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் வெயில் சுட்டெரித்ததால் மெயினருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது.நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அன்று நள்ளிரவில் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 1 மணிநேரத்திற்கு பிறகு வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் நேற்று இரவும் விடிய விடிய குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இன்று அதிகாலை முதலே மெயினருவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியது. பின்னர் சுமார் 7 மணி அளவில் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.இதனால் சுற்றுலா பயணிகள் ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இன்று காலை முதலே குற்றாலத்தில் அவ்வப்போது சாரல் மழைபெய்தும் குளிர்ந்த காற்று வீசியும் வருகிறது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் சுமாராக காணப்பட்டது.

Leave a Reply