- செய்திகள்

குற்றம் இல்லாத மாநிலமாக புதுச்சேரியை ஊருவாக்குவோம் சட்டசபையில் கவர்னர் கிரண்பேடி பேச்சு…

புதுச்சேரி,ஆக 25-
சட்டம்-ஒழுங்கை மேம்படுத்தி குற்றம் இல்லாத மாநிலமாக புதுச்சேரியை உருவாக்குவோம் என்று  சட்டசபையில் கவர்னர் கிரண்பேடி பேசினார்.
பட்ஜெட் கூட்டத்தொடர்
புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று சட்டசபையில் கவர்னர் கிரண்பேடி உரையாற்றி, கூட்டத்தொடரை தொடங்கி வைத்தார்.
கவர்னர் பேச்சு
சட்டசபையில் கவர்னர் கிரண்பேடி பேசியதாவது:-
நான் கவர்னராக பொறுப்பேற்ற பின்பு பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவை பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளேன். புதுச்சேரியின் வளர்ச்சியில் நீண்ட முன்னேற்றங்களை சுகாதாரம், கல்வி, சமூக நலன் ஆகியவற்றில் அடைந்திருப்பது உண்மையாகிலும் இன்னும் முன்னேற்றங்களை அடைவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது.
விழிப்புணர்வு
தூய்மையான இந்தியா திட்டத்தின் மீது அரசு கவனம் செலுத்தி புதுச்சேரியை திறந்தவெளி மலம் கழிக்கும் வழக்கத்தில் இருந்து விடுபட்ட முதன்மை மாநிலமாக வர வேண்டும். இதற்கு நாம், வீட்டு கழிப்பறைகள், பொது கழிப்பறைகள் கட்டுதல், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும்.
குப்பை சேகரித்தல், ஏரி, வாய்க்கால், கழிவுநீர் ஆகியவற்றை பணி முறையில் சுத்தம் செய்து மாநிலத்தின் மீது நல்லெண்ணத்தை உருவாக்க வேண்டும்.
குற்றமில்லாத….
நமது மாநிலத்தை குற்றமில்லாத யூனியன் பிரதேசமாக உருவாக்க சட்டம்-ஒழுங்கின் மீது கவனம் செலுத்த வேண்டும். முறையான காவல் கண்காணிப்பு, புலனாய்வு, காவல்துறை நவீனப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இதை நாம் விரைவாக சாதிக்க முடியும்.
இது நமது குடிமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் பத்திரமாக இருப்பதற்கான உணர்வை வழங்கி வளமான புதுச்சேரி என்ற கனவை நினைவாக்க உதவும்.
100 சதவீத ஆதார்..
மத்திய அரசானது ஆதார் அட்டை எண்ணை வங்கி கணக்கில் இணைப்பதன் மூலம் நேரடி பயன்மாற்றல் திட்டத்தின் கீழ் வெவ்வேறு மாநில மற்றும் மத்திய அரசின் நல திட்டங்களின் பணம் மற்றும் பொருள் ஆகிய இரண்டின் மூலமாக பயன்களை மக்களுக்கு நேரடியாக அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.பெரும்பாலான நலத்திட்டங்கள் நேரடி பயன்மாற்றல் அமைப்பு முறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
100 சதவீத ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலமாக அனைத்து பயன்களையும் அளிக்கும் நடைமுறையானது கால வரம்பு நிர்ணய அடிப்படையில் செய்து முடிக்கப்படும்.
இதன்மூலம் பயனாளிகளுக்கு பயனை அளிப்பதில் இரட்டை பயன்முறை தடுக்கப்பட்டு பயன்கள் உரிய பயனாளிகளை சென்றடையும் என்பது உறுதி செய்யப்படும்.நிதி நிலை குறித்த உண்மைகளை உரிய கண்ணோட்டத்தில் உங்கள் முன் வைப்பது சரியாக இருக்கும்.
வளர்ச்சி திட்டங்களுக்கு
தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலையில் இந்த ஆட்சிப்பரப்பானது அதன் நிதி ஆதாரங்களில் பெரும் பகுதியினை ஏற்கப்பட்ட செலவினங்களுக்கு பயன்படுத்துவதால் எஞ்சிய தொகை மட்டுமே வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது.
இச்சூழ்நிலையில் பயன்களை அளிப்பதில் தேவையற்ற இரட்டை பயன்முறையை தவிர்த்தல், நலத்திட்டங்களை சீரமைத்தல், அரசு நிதியை பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடை கடைபிடித்தல் ஆகியவற்றில் உரிய வழி வகைகள் மூலம் நிதி ஆதார ஒதுக்கீடு திறனை அதிகப்படுத்துவதற்கான பொருத்தமான கொள்கைகளை உருவாக்குவது அவசியமாகிறது.
தேர்வு செய்த புதிய அரசு வெவ்வேறு புதிய கொள்கை நுணுக்கங்களை கடைபிடித்து முன்னுரிமை அடிப்படையில் நிதி பிரச்சினையை சமாளிக்கும் என நம்புகிறேன்.
பாதுகாப்பான புதுச்சேரி
நமது மாநிலத்தின் எதிர்பார்ப்பு ஒருமித்த முயற்சியின் மூலம் அழகான, சுத்தமான, ஒழுங்கான, பொறுப்பான, பாதுகாப்பான புதுச்சேரி அமைவதாகும்.
இதை கருத்தில் கொண்டு சிறப்பு வாய்ந்த அவையின் உறுப்பினர்கள் தங்கள் மதிப்புமிக்க கருத்துரைகளை வழங்குவீர்கள் என நம்புகிறேன்.
ஆக்கப்பூர்வ விவாதங்கள்
மேலும் உறுப்பினர்கள் தங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கும் மிகுந்த மரியாதை அளிப்பதுடன், ஒத்துழைப்பு நல்கும் முறையில் மேம்பாடு தொடர்புடைய பிரச்சினைகள் மீது ஆக்கப்பூர்வ விவாதங்களை வைப்பீர்கள் என நம்புகிறேன். தங்கள் கலந்தாய்வு விவாதங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
மேற்கண்டவாறு கவர்னர் பேசினார்.

Leave a Reply