- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டால் அமைச்சர்கள் என்னை கடுமையாக தாக்கி அறிக்கை விடுவதா?

சென்னை, ஏப்.7-
அ.தி.மு.க. அரசு மீது மத்திய அமைச்சர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை சுட்டிகாட்டி நான் விளக்கம் கேட்டால், அதற்கு, அ.தி.மு.க. அமைச்சர்கள் பதில் சொல்லாமல் என்னை கடுமையாக தாக்கி அறிக்கை விடுவதா? என்று கருணாநிதி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அமைச்சர்கள்
அ.தி.மு.க. அமைச்சர்கள் இருவர் நேற்றைய தினம்  ஓர் அறிக்கை விடுத்துள்ளனர். அதில், நான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். நான் விடுத்த  அறிக்கைக்குத் தலைப்பே, "மத்திய அமைச்சர் ஜவடேகர் குற்றச்சாட்டுகளுக்காவது  முதலமைச்சர் ஜெயலலிதா பதில் அளிப்பாரா?"  என்பது தான். இதற்குத்தான் அ.தி.மு.க. அமைச்சர்கள் விடுத்த அறிக்கையில்  எனக்குப் பதில் அளிப்பதாகக் கூறி இருக்கிறார்கள்.
மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அ.தி.மு.க. அரசு மீதும், முதல்-அமைச்சர் மீதும் கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்களே, அதற்கு ஜெயலலிதா ஏன் பதில் கூறவில்லை என்று கேட்டிருக்கிறேன்.  அது பற்றி தற்போது அறிக்கை விடுத்துள்ள 2 அமைச்சர்களும் பதில் எதுவும்  அளிக்கவில்லை.
எதுவுமே இல்லை
மற்றொரு மத்திய அமைச்சரான ஜவடேகர், மின் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு  ஆதரவாகவே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது, மக்கள் நலனில் தமிழக முதல்- அமைச்சருக்கு அக்கறை இல்லை என்று சொல்லியிருக்கிறாரே, இந்தக் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதாவின் பதில் என்ன என்று கேட்டிருந்தேன். தற்போது அறிக்கை விடுத்துள்ள 2 அமைச்சர்களும் அதைப் பற்றியும் எதுவுமே கூறவில்லை.
மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பாக 7 மாநிலங்களின் அறிக்கையை மத்திய அரசு கேட்டதாகவும், 6 மாநிலங்கள் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளன என்றும், தமிழக அரசு மட்டும் இதுவரை அறிக்கை அளிக்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் கூறியிருக்கிறாரே என குறிப்பிட்டிருந்தேன்.   நேற்றையதினம் இரண்டு அமைச்சர்கள் கொடுத்த அறிக்கையில் இதுபற்றியும் எந்த விளக்கமும் இல்லை.
ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு
தமிழக மின் வாரியத்துக்கு கடந்த ஆண்டில் மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில்  மின்சாரத் துறையை நட்டத்திலிருந்து மீட்கவும்,  வருவாயை அதிகரிக்கவும்  உதவும் மத்திய அரசின் "உதய்" எனும் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு முன் வரவில்லை.  இத்திட்டம் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தியதன் மூலம் ரூ. 1.80 லட்சம் கோடி அளவுக்குப் பலன்  கிடைத்துள்ளது. ஆனால் தமிழக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என்று மத்திய அமைச்சர் ஜவடேகர் கூறியிருக்கிறார் என்று தெரிவித்திருந்தேன்.
என்மீது அர்ச்சனை
இதற்குத் தான் அ.தி.மு.க. அமைச்சர்கள் இருவர், எனக்கு அந்தத் திட்டம் பற்றித்  தெரியவில்லை, நான் குழப்பமான அறிக்கையை வெளியிட்டுள்ளேன் என்று எனக்கு "அர்ச்சனை" செய்திருக்கிறார்கள். தமிழக அரசு மீது  குற்றஞ்சாட்டியது மத்திய அமைச்சர்.  அதை எடுத்துக்காட்டி வெளியிடப்பட்டது  தான் எனது அறிக்கை. அது தவறா? தமிழ்நாட்டு மக்களே, எப்படிப்பட்ட அமைச்சர்கள் தமிழ்நாட்டைக் கடந்த 5 ஆண்டு காலம் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள்  என்பதைத்  தயவுசெய்து இப்போதாவது இப்படிப்பட்ட அறிக்கைகளிலிருந்தாவது புரிந்து கொள்ளுங்கள்.
அடுத்து எல்.ஈ.டி. பல்புகளைப் பற்றி அமைச்சர்கள் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைப் பற்றி மத்திய அமைச்சர் கூறும்போது,  எல்.ஈ.டி. பல்புகளை மத்திய அரசு குறைந்த விலையில் வழங்க தயாராக இருந்த போதிலும், அதிக விலை கொடுத்து வெளி மார்க்கெட்டில் தமிழக அரசு வாங்குகிறது என்று சொல்லியிருக்கிறார். இதற்கெல்லாம் என்ன விளக்கம் என்று கேட்டால், உடனடியாக என்னைக் கடுமையாகத் தாக்கி அறிக்கை விடுவது தான் பதிலா?
மீண்டும் படித்து பாருங்கள்
மேலும், அமைச்சர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,  "மத்திய அரசின் பல்வேறு பொதுத் துறைகள் இணைந்து ஏற்படுத்திய நிறுவனத்தின் மூலம் இந்தப் பணிகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பது பற்றியும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அமைச்சர் பெருமக்களே, நான் விடுத்த அறிக்கையை தயவுசெய்து மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். அதிலே எங்கேயாவது  நான் இந்தக் கேள்வியை எந்த இடத்திலாவது கேட்டிருக்கிறேனா என்றும் பாருங்கள்.
2ஜி வழக்கு
அ.தி.மு.க. அரசு மீது மத்திய அமைச்சர் சாட்டியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத அ.தி.மு.க. அமைச்சர்கள், மத்திய அமைச்சர், 2ஜி பற்றியும்,  1,76,000 கோடி ரூபாய் இழப்பு என மத்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது, அதற்குப் பதில் என்ன என்பதை கருணாநிதி தெரிவிக்கட்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்த  வழக்கு டெல்லியில் நடந்து கொண்டு இருக்கிறது. ஜெயலலிதாவைப் போல் வாய்தா வாங்காமல், பல்லாண்டு காலமாக விசாரணையை இழுத்தடிக்காமல், குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்கள்  நீதி மன்றத்திற்கு  முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.  "மத்திய தணிக்கைத் துறை  அறிக்கையின் அடிப்படையில்  வழக்கு  பதிந்து நடவடிக்கை எடுப்பது சட்டத்திற்குப் புறம்பானது" என்று 2 நாட்களுக்கு முன்பு கூட கர்நாடக உயர் நீதி மன்றத்தில் தீர்ப்பு கூறியிருப்பதையும் கூடத் தெரிந்து கொள்ளாமல்,  அ.தி.மு.க. அமைச்சர்கள், ஜெயலலிதாவிடம் மத்திய அமைச்சர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லுமாறு கூறத் துணிவில்லாமல், அவரை எப்படியாவது திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக; அது பற்றி என்னிடம் விளக்கம் கேட்டிருப்பதைப் பார்க்கும்போது,  "பாவம் அந்த அ.தி.மு.க. அமைச்சர்கள்" என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Leave a Reply