- செய்திகள்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பார்த்தசாரதி பெருமாள் கோவில் பாலாலயம் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்…

சென்னை, ஜூலை.11-

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் அமைந்துள்ள நரசிம்மர் கோவில்  கும்பாபிஷேகத்தையொட்டி, தொடக்க நிகழ்ச்சியாக, பாலாலயம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

யோகநரசிம்மர்

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், புராதனமிக்கதுமாக, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிபெருமாள் கோவில் விளங்குகிறது. இங்கு எழுந்தருளியுள்ள யோகநரசிம்மர், வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளுக்கும், அதன் கோபுரங்களுக்கும், பார்த்தசாரதிபெருமாள் கோவில் பின்கோபுர வாசல் விமானம், பாண்டி கோபுரம், நரசிம்மர் கல்யாண மண்டபம், நரசிம்மர் மண்டபத்தின் மேல்தளம், கீழ்தளங்கள், குளக்கரை ஆஞ்சநேயர் கோபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கும் திருப்பணிகள் மேள்கொள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

பாலாலயம்

இதன் தொடக்கமாக கோவிலில் பாலாலயம் நேற்று அதிகாலையில் நடைபெற்றது.

விழாவையொட்டி, நேற்று அதிகாலையில் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து பாலாலய பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அமைச்சர் அதிகாரிகள்

விழாவில், அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அரசு செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், அறநிலையத்துறை ஆணையர் மா.வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர் மா.கவிதா, இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி, கோவில் துணை ஆணையர் மற்றும் நிர்வாக அதிகாரி (கூடுதல் பொறுப்பு) மு.ஜோதிலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply