- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

கும்பகோணம் மகாமகத் திருவிழா: பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தி தரவேண்டும்

சென்னை, பிப்.16-
மகாமகத் திருவிழாவுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தி தரவேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தென்னக கும்பமேளா
தென்னகத்தின் கும்பமேளா என்று பெருமையோடு அழைக்கப்படும் கும்பகோணம் மகாமக பெருவிழா வருகிற 22-ந் ேததி நடைபெற இருக்கின்றது. நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் சீரும், சிறப்புமாக நடைபெறும்.
தற்போது தொடங்கியிருக்கும் மகாமகத் திருவிழாவிற்காக, கடந்த 2 நாட்களாக லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருக்கிறார்கள். இன்னும் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. இருப்பினும் இச்சிறப்பு வாய்ந்த விழாவிற்கு வரும் மக்கள் கூட்டம் அலை மோதுகின்ற நிலையில், அவர்கள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு வசதியை தீவிரப்படுத்த வேண்டும்.
அடிப்படை வசதிகள்
மேலும் இத்திருவிழாவிற்கு வந்து செல்லும் பொது மக்களுக்கு தேவையான தங்குமிடங்கள், குடிநீர், சுகாதார வசதிகள், கழிப்பிட வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் அதிக அளவில் ஏற்படுத்தி தர வேண்டும். மகாமக குளத்தைச் சுற்றிலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை தமிழக காவல்துறை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் நடைபெறும் மகாமக பெருவிழா உலகம் போற்றும் வண்ணம் பேரும், புகழோடும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பது தான் தமிழ் மக்களின் எண்ணமாகும். எனவே தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மகாமக திருவிழாவில் கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும் சிறப்பாக வழிபடுவதற்கான நல்ல சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Leave a Reply