- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

குடும்ப நல உதவி தொகை ரூ.3 லட்சமாக உயர்வு உள்பட அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள்

சென்னை, பிப்.20-
ஓய்வூதிய திட்டம் குறித்து பரிசீலிக்க வல்லுனர் குழு அமைக்கப்படும், அரசு ஊழியர்களுக்கான குழு காப்பீட்டு தொகை மற்றும் குடும்ப நல உதவி தொகை ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுவது, உள்பட பல்வேறு சலுகைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா  சட்டசபையில் அறிவித்தார்.
வேலைநிறுத்த போராட்டம்
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகளை வழங்கவேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கடந்த 10-ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எங்களுடைய 20 அம்ச கோரிக்கைகள் நியாயமானது. ஆகவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், "பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்திடவேண்டும் என்று பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் கோரி வருகின்றன. இந்த கோரிக்கை குறித்து தீவிரமாக ஆராயப்படவேண்டும். எனவே, இது பற்றி ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்படும்" என்று, சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
அரசின் முகமாகவும், மனமாகவும்
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிக்கை தாக்கல் செய்து பேசியதாவது:-
ஒளிவு மறைவு அற்ற, திறமை மிக்க, பொறுப்புள்ள நிர்வாகத்தை அளிப்பது நல் அரசின் இலக்கணம் ஆகும். இந்த அடிப்படையிலேயே எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் முகமாகவும், மனமாகவும் செயல்படுகிறவர்கள் அரசு அலுவலர்கள் தான். அரசால் தீட்டப்படும்  செயல் திட்டங்களும், வகுக்கப்படும் நலத் திட்டங்களும் உரிய முறையில் மக்களைச் சென்றடையச் செய்பவர்கள் அரசு அலுவலர்கள். ஒரு அரசின் செயல் திறன்  அரசு அலுவலர்களின் செயல்திறனை பொறுத்தே அமையும்.
அரசின் அடித்தளமாக, அச்சாணியாக, முதுகெலும்பாக விளங்குபவர்கள் அரசு அலுவலர்கள்.  இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலர்களின் நலனில் எப்போதும் தனி அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
சலுகைகள் வழங்க முடிவு
அரசு அலுவலர்கள் பணி தொடர்பாகவும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாகவும்  பல்வேறு  கோரிக்கைகள்  விடுத்துள்ளனர்.  அரசு அலுவலர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி  அவர்களின் கோரிக்கைகளை ஆராயும்படி
மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டிருந்தேன்.  அதன்படி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு அரசு அலுவலர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி உள்ளனர்.  அதன் அடிப்படையில் அரசு அலுவலர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
குடும்ப நல நிதி
கடந்த 40 ஆண்டுகளாக அரசு அலுவலர்களுக்கு  குடும்பநல நிதித் திட்டம் என்ற ஒரு திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு அரசு அலுவலர்களிடமிருந்து மாதந்தோறும் அவர்களது சம்பளத்திலிருந்து 30 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி, பணிக் காலத்தில் அரசு அலுவலர் இறந்தால், அவரின் வாரிசுதாரருக்கு 1 லட்சத்து  50 ஆயிரம் ரூபாய், வழங்கப்படுகிறது. இந்த குடும்ப நல நிதி உதவியை, உயர்த்த வேண்டும் என்று பல்வேறு சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ரூ.3 லட்சமாக உயர்வு
இதனை ஏற்று, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 3 லட்சம் ரூபாய் என உயர்த்தப்படும். அரசு அலுவலரின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும்  60 ரூபாய் இதற்காக பிடித்தம் செய்யப்படும்.  தற்போது, இத்திட்டத்திற்கு அரசு மானியமாக ஆண்டுதோறும் 6 கோடியே 18 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.  குடும்ப நல நிதி உதவித் தொகை உயர்த்தப்படுவதால் ஏற்படும் கூடுதல் செலவான சுமார் 6 கோடி ரூபாயை அரசு வழங்கும்.
ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள்
அரசு உதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களில் பணி புரியும் அலுவலர்கள், மற்றும் ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம ஊராட்சிகளின்  பணியாளர்கள் ஆகியோருக்கு குழுக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு காப்பீட்டுத் தொகையாக அரசு அலுவலர்களிடமிருந்து 30 ரூபாய் மாதந்தோறும்  பிடித்தம் செய்யப்படுகிறது. சராசரியாக ஒரு ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் அலுவலர்களிடமிருந்து காப்பீட்டுத் தொகை பங்களிப்பாக பெறப்படுகிறது.
குழு காப்பீட்டுத்தொகை
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு சராசரியாக செலுத்தப்படும் காப்பீட்டுப் பிரிமியம் தொகை 37 கோடி ரூபாய் ஆகும். அதாவது அரசு அலுவலர்களின் பங்களிப்பு நீங்கலாக, இத்திட்டத்திற்கு அரசு ஆண்டொன்றுக்கு 22 கோடி ரூபாய் வழங்கி வருகிறது. இந்தக் குழுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து  3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். அலுவலர்கள் தற்போது செலுத்தும் பங்களிப்பு 60 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படும். காப்பீட்டுத் தொகை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 20 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
பணி வரன்முறை
கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட அரசு அலுவலர்கள் பணி வரன்முறை செய்யப்பட்ட பின்னரே, ஊதிய உயர்வு போன்ற பல்வேறு பணிப் பலன்களை அவர்கள் பெற இயலும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியுள்ளதால், இதில் காலதாமதம் ஏற்படுகிறது.  இதனைத் தவிர்க்கும் வகையில் 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, எந்தவித விதித் தளர்வும் தேவைப்படாத அனைத்து நபர்களின் பணி நியமனமும், பொது அரசாணை மூலமாக முறைப்படுத்தப்படும்.
விதிகள் தளர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டிய பதவிகளுக்கு, பொதுவான அரசாணை, வெளியிடப்பட்ட பின்னர் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும். விதித் தளர்வு தேவைப்படும் அலுவலர்களைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெற்று  விதிகளைத் தளர்வு செய்வதற்கான அரசாணைகள் வெளியிடப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்  ஒப்புதல் பெறப்படும் வரையில்  அவர்களை தற்காலிக அரசு அலுவலர்களாகக் கருதி, அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்க வகை செய்யப்படும்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்
1.4.2003 முதல் அரசுப் பணியில் சேர்ந்துள்ள அரசு அலுவலர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியப் பங்களிப்புத் தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும், இவற்றிற்கான வட்டித் தொகையும் அரசுக் கணக்கில் தனியே வைக்கப்பட்டுள்ளன. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய தொகை உடனடியாக வழங்கப்படும்.
வல்லுனர் குழு
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே,  செயல்படுத்திட வேண்டும் என பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் கோரி வருகின்றன. இந்த கோரிக்கை குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும்.  எனவே, இது பற்றி ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும்.  அந்த வல்லுநர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தக்க முடிவு எடுக்கப்படும்.
ஊதியக்குழு பரிசீலிக்கும்
ஊதிய விகிதங்களை மாற்றியமைத்தல், தொகுப்பூதியத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை, காலமுறை ஊதியத்தின் கீழ்க் கொண்டு வருதல், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வருவோருக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குதல்,
போன்றவை குறித்து, பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இக்கோரிக்கைகள், பல்வேறு அரசு அலுவலர்களின் ஊதிய விகிதங்களை ஒப்பிட்டு, அவர்களின் அதிகார நிலை மற்றும் துறைகளின் ஒப்புநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்கப்பட வேண்டும். எனவே, இத்தகைய கோரிக்கைகளை ஊதியக் குழுவே பரிசீலிக்க இயலும் என்பதால், இந்த கோரிக்கைகள் அனைத்தும் எதிர் வரும் ஊதியக்  குழு மூலம் பரிசீலிக்கப்படும்.
எனது இந்த அறிவிப்புகள் அரசு அலுவலர்கள் புதிய உத்வேகத்துடன் பணிபுரிய வழிவகுக்கும் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

Leave a Reply