- செய்திகள், தேசியச்செய்திகள்

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக கரோனாவில் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 60 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.இந்தியாவில் கரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அர்ஜுன் ராம் மேக்வால், தர்மேந்திர பிரதான், விஸ்வாஸ் சாரங், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பி.ஸ்ரீராமுலு, கர்நாடக வேளாண் அமைச்சர் பி.சி.பாட்டீல், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில் இந்தியாவில் கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த பிரணாப் முகர்ஜியும் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார். குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “ வேறு ஒரு தனி நடைமுறைக்கு மருத்துவமனைக்குச் சென்றபோது நான் கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் எனக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.ஆதலால், கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், பல்வேறு மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply