- செய்திகள், விளையாட்டு

‘குஜராத் லயன்ஸை’ சமாளிக்குமா கிங்ஸ் லெவன்

மொஹாலி, ஏப். 11:-

மொஹாலியில் இன்று நடக்கும் 9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 3-வது ஆட்டத்தில் அறிமுக குஜராத் லயன்ஸ் அணியை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் கடைசி இடம் பிடித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் கிங்ஸ் லெவன் அணி, இந்த முறை வெற்றியுடன் தொடங்க முனைப்புடன் இருக்கிறது.

அதேசமயம், முதன்முறையாக சுரேஷ்ரெய்னாவை தலைமையில் ஐ.பி.எல். போட்டியில் களம் இறங்குகிறது குஜராத் லயன்ஸ் அணி. இந்த அணியில்  மெக்கலம், டுவைன் பிராவோ, ரெய்னா, ஸ்மித், உள்ளிட்ட வீரர்கள் ஏற்கெனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தனர் என்பதால், ரசிகர்களிடம் ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சீசனில், கிங்ஸ் லெவன் அணிக்கு கேப்டனாக இருந்த ஜார்ஜ் பெய்லி விடுவிக்கப்பட்டு, இந்த முறை டேவிட் மில்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கேப்டனாக இருந்து அனுபவம் அற்றவர் என்பதால், எப்படி அணியை வழிநடத்தப்போகிறார் என்பதுதெரியவில்லை. மேலும், அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் ஓய்வு பெற்றுவிட்டது அந்த அணிக்கு பெரிய இழப்பாகும்.

மேலும், அந்த அணியில் ஆல்ரவுண்டர்களாக பர்ஹான் பெஹார்டின், மோகித் சர்மா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஸ்வப்நில் சிங் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மற்ற வகையில் மேக்ஸ் வெல்(ஆஸி.), கெயில் அபாட்(தெ.ஆப்), முரளி விஜய் ஆகியோர் நிலைத்து ஆடினால் தான் குஜராத் லயன்ஸ் அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

மிட்ஸெல் ஜான்சன், சந்தீப் சர்மா, மோகித் சர்மா, கெயில் அபாட் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களாக பஞ்சாப் அணிக்கு இருப்பது பெரிய பலமாகும். பேட்டிங்கைக் காட்டிலும் பந்துவீச்சை அதிகம் நம்பியே கிங்ஸ் லெவன் அணி களம் இறங்குகிறது.

அதேசமயம், சுரேஷ் ரெய்னா தலைமையில் புதிதாக களம் இறங்கி குஜராத் லயன்ஸ் அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சமநிலையில்  உள்ள வீரர்களைக் கொண்டுள்ளது அந்த அணிக்கு பெரிய பலமாகும்.

குறிப்பாக அதிரடி ஆட்டக்காரர் பிரண்டம் மெக்கலம், சுரேஷ் ரெய்னா, ஆரோன் பிஞ்ச், டுவைன் பிராவோ, ரவிந்திர ஜடேஜா, ஜேம்ஸ் பாக்னர் ஆகியோர் இருப்பது எதிரணிக்கு நிச்சயம் கிலியை ஏற்படுத்தும்.

அதேசமயம், வேகப்பந்துவீச்சைப் பொருத்தவரை தென் ஆப்பிரிக்கபுயல் டேல் ஸ்டெயின், பிரவீண் குமார், பாக்னர் ஆகியோரும், சுழற்பந்துவீச்சீல் ஜடேஜா, ஆரோன் பிஞ்ச், மிஸ்ரா இருப்பது பலமாகும்.

ஒட்டுமொத்தத்தில் குஜராத் லயன்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என்பதில் மிகையில்லை.

அணி வீரர்கள் விவரம்…

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

டேவிட் மில்லர்(கேப்டன்), கெயில் அபாட், முரளி விஜய், மனன் வோரா, மிட்ஷெல் ஜான்சன், ஷான் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல், அனுரீத்சிங், அக்சர் படேல், விர்திமான் சாஹா, பிரதீப் சாகு, சந்தீப் சர்மா, மோகித் சராம், மர்கஸ் ஸ்டோனிஸ், ஸ்வப்நில் சிங், அர்மன் ஜாபர், பர்கான் பெஹார்டிந், கே.சி. கரியப்பா, ரிஷி தவான், குர்கீரத் சிங் மான், நிகில் நாயக், சர்துல்தாகூர்.

குஜராத் லயன்ஸ்:

சுரேஷ் ரெய்னா(கேப்டன்), டுவைன் பிராவோ, ஜேம்ஸ் பாக்னர், ஆரோன் பிஞ்ச், பிரன்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித், டேல் ஸ்டெயின்,பிரவீண் தாம்பே, இஷான் கிஷன், ரவிந்திர ஜடேஜா, சதாப் ஜகாதி, தினேஷ் கார்த்திக், சிவில் கவுசிக், தவால் குல்கர்னி, பிரவீண்குமார், பிரதீப் சங்வான், ஜெயதேவ் ஷா, உமாங் சர்மா, ஆன்ட்ரூ டை, சரப்ஜித் லட்டா, அக்ஸ்தீப் நாத், அமித் மிஸ்ரா, பிரஸ் டோக்ரா, ஏகலைவா திவேதி.

Leave a Reply