- செய்திகள், மாநிலச்செய்திகள்

கிராமங்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு ஆதரவானது மக்கள் கனவுகளை நனவாக்கும் பட்ஜெட்

புது டெல்லி, மார்ச் 1-

‘‘  கிராமங்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு ஆதரவான இந்த பட்ஜெட், மக்களின் கனவுகளை நனவாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

பட்ஜெட் குறித்து மோடி கூறி இருப்பதாவது-
தரமான மாற்றங்கள்

‘‘விவசாயம், கிராமப்புற அடிப்படை கட்டமைப்பு, சுகாதார நலம், வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் தலித் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கு இதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பு

கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான பட்ஜெட் இது. நாட்டில் தரமான மாற்றங்கள் ஏற்படுவதற்காக தனி கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. சாதாரண மக்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை இது ஏற்படுத்தும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நாட்டில் இருந்து வறுமையை ஒழிப்பதற்கான செயல் திட்டம் இதில் இடம்பெற்றுள்ளது.

சாலை-மின்சாரம்

விவசாயிகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில், ‘பிரதான் மந்திரி கிரிஷி யோஜ்னா’ திட்டம் மிகவும் முக்கியமானது.

கிராமங்களுக்கு சாலை வசதியும், மின்சாரமும் முக்கிய தேவை. 2019-ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து கிராமங்களும் சாலைகளால் இணைக்கப்படும். 2018-க்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து கொடுக்கப்படும்.

ஊரக வேலைவாய்ப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஏழைக்கும் சொந்த வீடு என்பது கனவாகவே  இருந்து வருகிறது.

அவர்களுடைய கனவு நனவாக, அந்தத் துறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கபட்டு உள்ளது.

அடுப்பு ஊதும் பெண்கள்

‘ஏழைகளைப் பற்றி ஏராளமான அரசியல்’ பேசப்பட்டு வருகிறது. அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது.

விறகு கட்டைகளில் ஏழைப் பெண்கள் அடுப்பு எரிப்பதால், ஒரு நாளைக்கு 400 சிகரெட்டுகள் புகைக்கும் அளவுக்கு அவர்களுக்கு தீங்கு ஏற்படுகிறது.

இலவச சமையல் கியாஸ் திட்டத்தின் மூலம் இது போன்ற கோடிக்கணக்கான பெண்கள் பயன் அடைவார்கள். பெண்களின் நலனை பேணுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் இது தடுக்கும்.

ரூ.2 லட்சம் கோடி

ராணுவ அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கி இருப்பதன் மூலம், நாட்டின் எல்லைப்பகுதிக்கு பயன் கிடைக்ககும்.

ஆரம்பக் கல்விக்கும் இந்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மொத்தத்தில், இந்த பட்ஜெட் மக்களின் கனவுகளை நனவாக்கும் நம்பிக்கையை நமக்கு அளித்துள்ளது’’.

இவ்வாறு மோடி கூறினார்.

–.

Leave a Reply