- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

கிரானைட் குவாரியை மூட உத்தரவிடாத அதிகாரிகளைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு கிராம மக்கள் அறிவிப்பு…

மணப்பாறை, ஏப்.4-
கிரானைட் குவாரியால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, குவாரியை மூட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை கண்டுக்காத அரசு அதிகாரிகளைக் கண்டித்து தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக வையம்பட்டி கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ளது துலுக்கம்பட்டி. மலைகிராமமான இந்தப் பகுதியில் தனியார் கிரானைட் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாழ்பட்டுவிட்டது. குவாரியில் வைக்கப்படும் வெடிகளால் அருகிலுள்ள விவசாய கிணறுகளின் பக்கவாட்டுச் சுவர்கள் இடிந்து பல கிணறுகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி வட்டாட்சியர், கோட்டாட்சியர், கனிமவள அதிகாரிகளுக்கு பல புகார்களை கிராமமக்கள் அனுப்பி உள்ளனர்.
தற்காலிகமாக மூடல்
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து தேர்தலை புறக்கணித்து ஊருக்குள் பேனர்களை வைத்தனர். இதனைத் தொடர்ந்து மணப்பாறை சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான அக்பர்அலி கிரானைட் குவாரியில் ஆய்வை மேற்கொண்டார். மேலும், கிராம மக்களைச் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து கிரானைட் குவாரியை தற்காலிகமாக மூடவும், மேற்கொண்டு வேலைகள் எதுவும் நடைபெறக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பேச்சுவார்த்தை
மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்படும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். எனினும், கிரானைட் குவாரியை நிரந்தரமாக மூடும்வரை தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply