- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பது குறித்து பேச தமிழகத்துக்கு உரிமை இல்லை என்று சொல்வதா?

சென்னை, பிப்.4-

காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பது குறித்து பேச தமிழகத்துக்கு உரிமை இல்லை என்று சொல்வதா? என்று கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையாவுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–-

அரசியல் சாசனம்

காவிரி ஆற்றில் கர்நாடகம் கழிவு நீரை கலக்க விடுவது குறித்து வினா எழுப்ப தமிழகத்திற்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை என்று கர்நாடக முதல்-–அமைச்சர் சித்தராமையா கூறியிருக்கிறார். கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையாவின் இந்த பேச்சு திமிரானது, கண்டிக்கத்தக்கது,  பொறுப்பற்றது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்டது ஆகும்.

கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குள் பாயும் காவிரி தான் தமிழகத்தில் 5 கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், 25 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் திகழ்கிறது.  அந்த வகையில் தூய்மையான காவிரி நீரைப் பெறும் உரிமை தமிழக மக்களுக்கு உண்டு. மக்கள் நல அரசு என்ற முறையில் அவர்களுக்கு தூய்மையான காவிரி நீரை வழங்க வேண்டிய அரசியல் சாசனக் கடமை கர்நாடக அரசுக்கு உண்டு.

கழிவு நீரை…

ஆனால், காவிரியில் கழிவு நீரை கலக்க விட்டதன் மூலம் அரசியல் சட்டப்படியான கடமையிலிருந்து கர்நாடகம் தவறிவிட்டது. அதை நியாயப்படுத்தியதன் மூலம் அரசியல் சட்டத்தை சித்தராமையா அவமதித்துவிட்டார். காவிரியில் கர்நாடக மாநில கழிவுகள் கலப்பது குறித்து வினா எழுப்ப தமிழகத்திற்கு அரசியலமைப்பு சட்டப்படி உரிமை உள்ளது. அதனால் தான் இது குறித்த தமிழக அரசின் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு கர்நாடகத்திற்கு அறிவிக்கை அனுப்பி உள்ளது.

பிரதமருக்கு கோரிக்கை

இந்தநிலையில் காவிரியில் கழிவு நீர் கலப்பது பற்றி வினா எழுப்ப தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று பேசுவதும், யார் தடுத்தாலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டியே தீருவேன் என்று வீர முழக்கமிடுவதும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவையாகும். மேலும், காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்தும்படி கர்நாடக அரசுக்கு பிரதமர் மோடி ஆணையிட வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply