- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட பூமிபூஜை நடத்தியதற்கு கடும் கண்டனம்

சென்னை, ஏப்.4-
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான பூமிபூஜைகள் கர்நாடக அரசின் ஒத்துழைப்போடு நடத்தப்பட்டுள்ளதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உச்சநீதி மன்றத்தில் வழக்கு

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகள் மீதும் கடந்த 28-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற இருந்தது. ஆனால் கர்நாடக அரசு இதை இழுத்தடிக்கும் வகையில் மனுத்தாக்கல் செய்ததால் ஜூலை 19-ந் தேதிக்கு இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காக கன்னட இனவெறியர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரை தூண்டிவிட்டு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு பூமிபூஜை போட வைத்துள்ளது.

தமிழகத்தில் கொந்தளிப்பு
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் கர்நாடகா அரசின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்ட இந்த தான்தோன்றித்தனமான செயலை மத்திய பாரதிய ஜனதா அரசு கண்டிக்கவும் இல்லை. இது தமிழக மக்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
எச்சரிக்கை
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை பா.ஜனதா அரசு இன்னமும் அமைக்கவில்லை. தற்போது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் புதிய அணைக்கான பூஜை போடுவதையும் கண்டிக்காமல் மவுனம் ஒன்றையே பதிலாக வைத்திருக்கிறது மோடி அரசு.

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதில் காங்கிரசும் பா.ஜனதாவும் கைகோர்த்து கொண்டிருப்பதை தமிழக மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இந்த துரோகத்துக்கும், வஞ்சகத்துக்கும் நிச்சயம் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டத்தான் போகிறார்கள் என எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.

Leave a Reply