BREAKING NEWS

காவலர்களுக்கு மன அழுத்தம் ஏன்?

ஒவ்வொருவரும் தன் வாழ்க்கைக்கு ஆதாரமாக ஒரு தொழிலை அல்லது அலுவலைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அந்த தொழிலில் உள்ள நன்மை தீமைகள், சுகம் மற்றும் சிரமங்கள் ஆகியவற்றை கேட்டு அறிந்திருக்க வேண்டும். முன்னதாக அந்த தொழில் அல்லது அலுவலில் ஈடுபட்டிருந்தவர்களின் அறிமுகமிருந்தால், அல்லது  அவரது பெற்றோரோ  உறவினர்களோ அந்த தொழிலில் இருந்திருந்தால், அந்த தொழிலின் நுணுக்கங்கள் அவர் வளர்ந்து வந்த காலத்திலேயே அவரது மனதில் குடியேறியிருக்கும்.  அனுபவ அறிவு ஏற்பட்டிருக்கும். அந்த அனுபவம் அவர் அந்தப் பணியில் எதிர்கொள்ளும் நடைமுறை சிரமங்களுக்கு  அவரை தயார்படுத்தியிருக்கும்.  சவால்களைச் சமாளிப்பதில் சிரமம் இருக்காது. எதிர்பாராத புதிய சிரமங்களைக்கூட சமாளிக்க அவருக்கு அவரது அனுபவ அறிவு கைகொடுக்கும்.

காவல்துறை மற்றைய துறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. சாதாரணமாக ஒவ்வொரு மனிதனுக்கும் அடுத்தவன் செய்யும் தவறைச்சுட்டிக்காட்டி, விமர்சிப்பது அல்லது  கடிந்துகொள்வது என்பது மிகவும் பிடித்தமான விஷயம். ஆனால், மற்றவர் தன்னுடைய குறைகளைச் சுட்டிக்காட்டுவதுதான் யாருக்குமே பிடிக்காத ஒன்றுமட்டுமல்ல வெறுப்பானதும் கூட.

சட்டத்தையும் அரசின் விதிமுறைகளையும் மீறுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பில் இருக்கும் காவலர்கள், சாதாரண மக்கள்  அவர்களை நெருங்கவோ, தவறைச்சுட்டிக்காட்டவோ தயங்குகின்ற இடத்தில் இருப்பது, மற்றவர் பார்த்து பொறாமைப்படும் ஒரு நிலைதான். விருப்பமான நிலைதான். ஆனாலும் அதற்கென்று அவர்கள் கொடுக்கவேண்டிய விலையும் மற்றவர்களைவிட சற்று அதிகம்தான்.

சமூகமும், அவர்கள் சார்ந்திருக்கும் காவல்துறையும் அவர்களிடம், மிக உயர்ந்த ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும், மற்றவர்களுக்கு உதாரணமாகத்திகழும் நடத்தையையும் எதிர்பார்க்கிறது. மிடுக்கான சீருடையில் அவர்களை பொதுவெளியில் உலவவிட்டு அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறது. சீருடை அணிந்த காவலர் இப்படி நடக்கலாமா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

எந்த அளவுக்கு ஒருவன் தனக்கு ஏற்படும் தவிர்க்கமுடியாத துன்பங்களையும், தொல்லைகளையும் பொறுத்துக்கொள்கிறானோ அந்த அளவுக்கு அவன் இந்த சமுதாயத்தில் வாழத் தகுதியானவனாகிறான் என்றார் ஓர் அறிஞர். காவல்துறையினருக்கு இது மிக மிகத் தேவை.

காவல்துறையினரின் மனத்தில் அச்சத்தையும், செயலில் தயக்கத்தையும் ஏற்படுத்துகின்ற பலகட்டுப்பாடுகள், பலமுனைக்குற்றச்சாட்டுகள், அவர்களின் திறமையை அதிகமாகவே பாதிக்கும் என்பதை இந்த சமுதாயமும் சமூக ஆர்வலர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் சிலரும் உணர்வதில்லை.

காவல்துறையில் உள்ள அதிகாரிகளில் சிலருக்கு அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் தலைமைப் பதவிக்கான தகுதி இருப்பதில்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

“தன்கீழ் பணியாற்றும் அலுவலரை மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்யும் அதிகாரி பலவீனமானவர்,  பிரச்சினைகள் வரும்போது அப்படி எரிந்து விழுபவர், மிக பலவீனமாவர். பொது இடத்தில் பலர் முன்னிலையில் அப்படி கடிந்து கொள்ளும் உயரதிகாரி மிகமிக பலவீனமானவர்,” என்று, அனுபவமிக்க மூத்த அதிகாரி ஒருவர் என்னிடம் சொன்னது என் நினைவுக்கு வருகிறது. அப்படிப்பட்ட அதிகாரிகள்தான் அடித்தட்டு அலுவலர்களை மன உளைச்சலின்  உச்சகட்டத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.

அதே சமயம் இதை அப்படியே பொதுமைப்படுத்திவிடவும் முடியாது. அப்படிக் கடிந்துகொள்ளும் நிலைக்கு  உயரதிகாரிகளைக் கொண்டுசெல்லும்  அலுவலர்களும் காவல்துறையில் இல்லாமலில்லை. கோபத்தில் கடிந்துகொள்ளும் அதிகாரிகள் அவர்களின் சிறந்தபணியை, பாராட்டவும், தக்கதருணத்தில் உரிய வெகுமதியளிக்கவும், குறைகளைக்கேட்டு உதவிநடவடிக்கை எடுக்கவும் தயங்காதபோது அவர்களின் கடும்சொல்கூட அவரைக் காயப்படுத்துவதில்லை. சுருங்கக்கூறின் ஒவ்வொரு அலுவலரும், அதிகாரியும் அடுத்தவர் இடத்தில் தன்னை வைத்துப்பார்த்து, பொறுப்புணர்ந்து நடந்துகொண்டால் அவருக்கும், அவரால் இந்த் துறைக்கும் பெருமை.

எனது அனுபவத்தில், தன்னை உயரதிகாரி அளவுக்கு அதிகமாக கடிந்துகொண்டே  இருக்கிறார் என்று,  வேலையைவிட்டுப்போக முற்பட்டவர்,  அவர் உயர்பதவிக்கு வந்ததும், அவரின் கீழ் பணிபுரிந்தவர்களிடம் அதேமாதிரிதான் நடந்து கொண்டார் என்பதுதான் குறிப்படத்தக்கதும் சிந்திக்கக்கூடியதும் ஆகும்.

யாரோ ஒரு சிலரின் தவறான வழிநடத்துதலால், தவறான நோக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும், இந்தத் துறைக்கு வந்தவர்கள் தங்களின் கணிப்பு தவறானதை உணரும்போது பணியில் உற்சாகத்தை இழந்து கண்டிப்புக்கு ஆளாகிறார்கள்.

காவல்துறையிலும், ராணுவத்திலும் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம் அவர்களுக்கு பணிநிமித்தமாகவே உயிரைக் கொல்லக்கூடிய ஆயுதமான துப்பாக்கியைக் கொடுத்துவைத்திருப்பதுதான்.  பயிற்சியின்போது கிட்டத்தட்ட மூன்று மாதங்களில் அவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்த பிறகுதான் கையில் துப்பாக்கி பயிற்சிக்காக கொடுக்கப்படுகிறது, ஆயுதப் பயிற்சியளிக்கப்படுகிறது.

மற்ற துறைகளைவிட காவல்துறையில் ஒழுங்கு நடவடிக்கை உடனடியாகவும், கடுமையானதாகவும் இருக்கும். சரியான புரிதல் இல்லாத, கொடுக்கப்பட்ட பயிற்சியை சரியான விதத்தில் பயன்படுத்தத் தெரியாத அலுவலர்களும்,  அதிகாரிகளும்தான் பட்டுக்கோட்டையார் சொன்னபடி தங்கள் ‘கடமையில் தூங்கி புகழை இழக்க” வேண்டியிருக்கும்.            அத்தகைய நபர்கள்தான் மன உளச்சலுக்கு ஆளாகி தற்கொலை என்ற தவறான முடிவுக்குப் போகிறார்கள்.  கையில் உள்ள ஆயுதத்தை தவறாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

நான் பணிபுரிந்த காலத்தில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப்பணியில் இருந்த காவலர் ஒருவர் காலணி அணியவில்லை என்று கண்டித்த உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்றுவிட்டு, அந்த வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுவிட்டார்.

இளம்வயதில் காவல்துறையில் வேலைகிடைத்து திருமணம் முடிக்கும் நிலையில் உள்ள இளைஞர்களுக்கு,  அவர்கள் திருமணம்தான் பிரச்சினையாக இருக்கிறது.  மணப்பெண்னை தீர்மானிப்பதில் பெற்றோரிடையே கருத்து வெறுபாடு இருக்கிறது. அதிலும் அலுவலர் பயிற்சியின் போது அல்லது பணியின்போது காதல் வயப்பட்டுவிட்டால்,பெரும்பாலும் ஒட்டுமொத்த உறவுமே எதிரணியில் நின்று குரல் கொடுப்பார்கள். அப்போது அந்த  காவலர் மனவுளைச்சலுக்கு ஆளாகிறார். அப்போது அவரது பணியில் ஏற்படும் சிரமங்களால் எழும் மன அழுத்தமும் இணையும் போது மிகமோசமான ஒரு விளைவை ஏற்படுத்தி அவரைத் தற்கொலை முடிவுக்கு போகத்தூண்டுகிறது.

எதுவும் நிரந்தரம் இல்லை, இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையும், தவிர்க்க முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் தேவை. காவல்துறை போன்ற கடினமான பணியைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு அது அதிகமாகவே தேவை.

காவல்துறை பணியாளர்களுக்கு அவர்களின் பணியை எல்லா சமயத்திலும் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்து, கணிக்க முடியாத  நேரம்வரை அலுவல் நீடிக்கும். பணியாற்ற தயாராக இருக்கவேண்டும். உணவு, ஓய்வு, உறக்கம் இவை பற்றி சிந்திக்க முடியாமல்போகவும்  வாய்ப்பிருக்கிறது.

பணி எவ்வளவு கடுமையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்கள் நேர்மையாகவும், திறமையாகவும் பணியாற்றும்போது மதிப்பும் மரியாதையும் மற்ற துறைகளைவிட மிக அதிகமாகக் கிடைக்க வாய்ப்புமிருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாது.

ரோஜாச்செடியில் மலரைவிட முள்தான் அதிகமாக இருக்கிறது என்பதற்காக அதனை யாரும் முள்செடிஎன்று சொல்லுவதுமில்லை ஒதுக்கித்தள்ளுவதுமில்லை. வாலில் நஞ்சை வைத்திருந்தாலும் வாயிலுள்ள தேனால் தான் தேனீக்கு பெருமை.

உன்னை ஒருவரால் கோபமடையச்செய்யமுடிகிறது, வருத்தமடையச்செய்ய முடிகிறது என்றால் உன்னைவிட அவர் திறமையானவர் என்று ஒப்புக்கொண்டாகவேண்டும்.

நீங்கள் நீங்களாக இருக்கும்வரை சுயசிந்தனையோடு செயல்பட்டு நியாயமாக செயல்படும்வரை யாருக்கும் அஞ்சவேண்டியதில்லை தவறானமுடிவுக்கு போகவேண்டியதுமில்லை என்பதை காவல்துறையில் பணியாற்றும் காவலர் முதல் உயர் அதிகாரிகள் வரை உணர்ந்துகொள்ளவேண்டும்.

 – மா.கருணாநிதி,

காவல்துறை கண்காணிப்பாளர் (ஓய்வு)

 

 

 

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *