- செய்திகள், தேசியச்செய்திகள், வணிகம்

காளையை வீழ்த்திய கரடி சென்செக்ஸ் 170 புள்ளிகள் வீழ்ச்சி…

புதுடெல்லி, மே 3:-

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வீழ்ந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 170 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 44 புள்ளிகள் இறங்கியது.

நிதி நிலை முடிவுகள்

நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லாதது, கடந்த ஏப்ரல் மாதத்தில் தயாரிப்பு துறையின் செயல்பாடுகள் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது, சர்வதேச நிலவரங்கள் பாதகமாக இருந்தது போன்ற காரணங்களால் நேற்று பங்கு வர்த்தகம் படுத்தது.

மும்பை பங்குச் சந்தையில் வங்கி, ரியல் எஸ்டேட், தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ஐ.டி. உள்பட பல துறைகளின் குறியீட்டு எண்கள் சரிந்தது. நுகர்வோர் சாதனம், உலோகம், மின்சாரம் உள்பட சில துறைகளின் குறியீட்டு எண்கள் உயர்ந்தது.

கெயில்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பி.எச்.இ.எல்., கெயில், மாருதி, லுப்பின், கோல் இந்தியா, ரிலையன்ஸ், எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டாக்டர்ரெட்டீஸ், டாட்டா ஸ்டீல், ஐ.டி.சி., ஸ்டேட் வங்கி, இன்போசிஸ் உள்பட 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 169.65 புள்ளிகள் குறைந்து 25,436.97 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் நிப்டி 43.90 புள்ளிகள் இறங்கி 7,805.90 புள்ளிகளில் முடிவுற்றது.

Leave a Reply