- செய்திகள், வணிகம்

காளையின் வெற்றி நடை தொடருமா?

 

புதுடெல்லி, மார்ச் 28:-

கடந்த 4 வாரங்களாக நம் நாட்டு பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இந்த நிலையில் இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்று நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.
பங்கு முன்பேர வணிகம்
பங்கு முன்பேர வணிக கணக்கு முடிப்பு நெருங்குவது, அன்னிய முதலீடு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை நிலவரம் போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் இந்த வார பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும்.

இந்திய பங்குச் சந்தைகளின் எழுச்சியில்  அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடும் கணிசமான பங்கினை கொண்டுள்ளது. இந்த  மாதத்தில் இதுவரை அவர்கள் நம் நாட்டு சந்தைகளில் ரூ.15 ஆயிரம்  கோடிக்கு  மேல் முதலீடு செய்துள்ளனர். வரும் வாரத்திலும் அவர்கள் முதலீட்டை அதிகரிக்கும் பட்சத்தில் அது நம் பங்குச் சந்தைகளுக்கு சாதகமாக இருக்கும்.
வட்டி குறைப்பு

சிறு சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு, கடந்த பிப்ரவரி மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் நிர்ணயித்துள்ள இலக்கை காட்டிலும் குறைவாக உள்ளது போன்ற சாதகமான அம்சங்களால் ரிசர்வ் வங்கி அடுத்த மாதம் வெளியிடும் பணக்கொள்கை ஆய்வறிக்கையில் முக்கிய வட்டி விகிதங்களை குறைக்கும் என்று எதிர்பார்க்கிறது. இதுவும் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சென்ற வாரத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1.54 சதவீதம் (385 புள்ளிகள்) அதிகரித்து 25,337.56 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 1.47 சதவீதம் (112 புள்ளிகள்) உயர்ந்து 7,716.50 புள்ளிகளில் முடிவுற்றது.

Leave a Reply