- செய்திகள், வணிகம்

காளையின் வெற்றி நடை தொடருமா? இந்த வார பங்கு வர்த்தகத்தில்

புதுடெல்லி, ஏப்.25:-

கடந்த 2 வாரங்களாக நம் நாட்டு பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக  இருந்தது. இந்த நிலையில் இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம்  இருக்கும் என்று நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.
பங்கு முன் பேர வணிகம்
ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழக்கிழமையன்று பங்கு முன்பேர வணிக கணக்கு முடிக்கப்படும். அந்த வகையில்  இந்த வாரம் பங்கு முன்பேர கணக்கு முடிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட தொடங்கி விட்டன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமையன்று நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது.

இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் இன்றைய பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும். மேலும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐடியா, பார்தி ஏர்டெல், உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் இந்த வாரம் வெளிவர உள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்றத்தில் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத் தொடரின் செயல்பாடுகள் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அன்னிய முதலீடு, சர்வதேச  சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க பெடரல் வங்கி கூட்டம் போன்றவை இந்த வார பங்கு  வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய  ரூபாயின் மதிப்பும் இந்த வார பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும்.

சென்செக்ஸ்

சென்ற  வாரத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 211.39 புள்ளிகள் அதிகரித்து 25,838.14 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய  பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 48.85 புள்ளிகள்  உயர்ந்து 7,899.30 புள்ளிகளில் முடிவுற்றது.

Leave a Reply