- செய்திகள், விளையாட்டு

கால் இறுதியில் சாய்னா நேவால் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்

உஹான்(சீனா) ஏப்.29:-

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

சீனாவில் உள்ள உஹானில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தப் போட்டியில் 5-வது இடத்தில் உள்ள   இந்தியாவின் சாய்னா நேவால் தாய்லாந்தின் ஜிந்தாபோலை 21-14, 21-18 என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிச் சுற்றை எட்டினார். சாய்னா இதுவரை ஜிந்தாபோலுடன் 7 முறை மோதி அனைத்திலும் வென்றுள்ளார்.

சாய்னா கால் இறுதியில் சீனாவின் ஷிசியான் வாங்கை சந்திக்கிறார். ஷிசியானுடன் 13 முறை மோதியுள்ள சாய்னா 6 முறை வெற்றி கண்டுள்ளார். குறிப்பாக கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

மற்றொரு மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து தோல்வியைத் தழுவினார். இவர் சீன தைபேயின் தாய் ஜு யிங்கிடம் 21-13, 20-28, 8-21 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார். முதல் சுற்றில் சிந்து எளிதில் வென்றார். இரண்டாவது சுற்றிலும் கூட சிந்து ஒரு கட்டத்தில் 12-6 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். ஆனால் பின்னர் தாய் 15-15 என்ற கணக்கில் சம நிலை பெற்றார். அதைத் தொடர்ந்து சிந்து 20-19 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற போதும் அந்த செட்டைக் கைப்பற்ற முடியவில்லை. மூன்றாவது செட்டில் தாய் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Leave a Reply