- செய்திகள், மாநிலச்செய்திகள்

காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் 4 வழிப்பாதை, காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிடப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடிநேற்ருக்காலை புதுவைக்கு வந்தார். காலை 11.20 மணியளவில் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்த பிரதமரை கவர்னர் தமிழிசை, மத்திய மந்திரி, பா.ஜனதா கட்சியினர், கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் கார் மூலம் ஜிப்மர் கலையரங்கத்துக்கு பிரதமர் வந்தார். அவரை ஜிப்மர் இயக்குனர், அதிகாரிகள் வரவேற்றனர். அங்கு நடந்த அரசு விழாவுக்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். கவர்னர் தமிழிசை, பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், செல்வ ராஜ், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அங்கு காணொலி காட்சி வழியாக விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கும் 4 வழிப்பாதை, சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான 56 கி.மீ. சாலை பணி, காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

புதுவை துறைமுகத்தில் சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் சிறிய துறைமுக மேம்பாட்டு பணி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டரங்கில் ரூ.78 கோடியில் 400 மீட்டர் தடகள பயிற்சிக்கு சிந்தடிக் டிராக் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

ஒட்டுமொத்தமாக பிரதமர் மோடி ரூ.3 ஆயிரத்து 23 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்து பேசினார்.

பின்னர் பிரதமர் மோடி லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்துக்கு வந்து உரையாற்றினார்.

பின்னர் பகல் 1.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார். அங்கிருந்து கோவை புறப்படுகிறார்.

பிரதமர் வருகையை யொட்டி லாஸ்பேட்டை, விமான நிலைய சாலை, கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. பிரதமர் காரில் செல்லும் சாலையில் வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். பாதுகாப்பு பணிக்காக கமாண்டன்ட் ரவீந்திரன் தலைமையில் 120 அதிவிரைவு படையினர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். துணை ராணுவ படையினர் 200 பேர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

நகரம் முழுவதும் போலீசார் கண்காணிப்பும், பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. பிரதமர் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் அறிவிப்பால் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் வந்து செல்வதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு அரசு, தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பில் இன்று (வியாழக்கிழமை) விடுமுறை விடப்பட்டது.

Leave a Reply