- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் குலாம்நபி ஆசாத் ஆலோசனை வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் எது?

சென்னை, மார்ச் 26-

தமிழக காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் குலாம்நபி ஆசாத் ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரசுக்கு வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகள் எவை என்பதை கண்டறிய வேண்டும் என்று குழுவில் இடம்பெற்று உள்ளவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருணாநிதியுடன் சந்திப்பு
காங்கிரஸ் கட்சியின் சார்பில் டெல்லி மேலிட தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகில் வாஸ்னிக் ஆகியோர் நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார்கள். அந்த சந்திப்பில் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. கருணாநிதியை சந்தித்த பிறகு காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர்.

வெற்றி தொகுதிகள்

அங்கு தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சியில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையிலான குழுவுடன் ஆலோசனை நடத்தினார்கள். கூட்டத்தில் குழுவில் இடம்பெற்றுள்ள தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், யசோதா, கோபிநாத், தனுஷ்கோடி, சண்முகம், ஆகியோரும் இடம்பெற்றனர்.

அப்போது தி.மு.க.வுடன் நடத்தப்பட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், தி.மு.க.விடம் தொகுதி எண்ணிக்கை உறுதியான பின்னர், காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று தி.மு.க. குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை கேட்டு பெறவேண்டும். அதற்காக வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை ஆய்வு செய்து பட்டியல் தயார் செய்யும் படி குழு இடம்பெற்றுள்ளவர்களுக்கு குலாம்நபி ஆசாத் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply