- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

காங்கிரஸ் தொகுதி பங்கீடு சம்பந்தமாக கருணாநிதியை குலாம் நபி ஆசாத் இன்று சந்திக்கிறார்

சென்னை, ஏப்.4-
காங்கிரஸ் தொகுதி பங்கீடு சம்பந்தமாக கருணாநிதியை குலாம் நபி ஆசாத் இன்று (திங்கட்கிழமை) சந்திக்க உள்ளார் என்றும் அப்போது நல்ல முடிவு கிடைக்கும் என்றும் மு.க.ஸ்டலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆலோசனை

தி.மு.க. தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அரவது இல்லத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதிமாறன் ஆககியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது தேர்தல் அறிக்கை குறித்தும், காங்கிரசுடனான தொகுதி பங்கீடு குறித்தும் கருணாநிதியுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

ஆலோசனைக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குலாம் நபி  வருகை

கேள்வி:- தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் முடிவடையும் என்று காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. தொகுதி பங்கீடுப் பேச்சுவார்த்தை எப்போது முடிவடைந்து, தேர்தல் உடன்பாடு ஏற்படும் ?

பதில்:- டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நாளை (இன்று) தலைவர் கருணாநிதியை சந்திக்க இருக்கிறார். அனேகமாக நாளை (இன்று) ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

கேள்வி:- சென்னையில் பல இடங்களில் தொடர்ச்சியாக தேர்தல் விதிமுறைகளை மீறி சாலைகள் போடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருவதைப் பற்றி உங்களது கருத்து என்ன ?

பதில்:- இதற்குத் தேர்தல் ஆணையம்தான் உரிய பதிலளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பலமுறை திமுக சார்பில் திமுக வழக்கறிஞர்கள் தமிழகத் தேர்தல் ஆணையரிடம் நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளோம். அதுமட்டுமல்லாமல், டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரைக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல அதிகாரிகள் எந்தெந்த சூழ்நிலையில் பணியாற்றுகிறார்கள் என்று அறிந்து, அவர்களை மாற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அதுகுறித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரையிலும் எடுக்கப்படவில்லை. எனவே புகார்கள் குறித்துத் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply