BREAKING NEWS

‘‘கவிதையை யாரும் அழித்துவிட முடியாது..!’’

மரபுக் கவிதைக்கும், புதுக்கவிதைக்கும் ஒரு பாலம் என்றும் நவீன கவிதைகள்.. ஹைக்கூ என பரந்து விரியும் இவரது கவி ஒளி.. எனவும் தமிழிலக்கிய உலகம் கொண்டாடும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் நம்முடன் கலந்துரையாடியபோது…

 

எழுத்தின் தொடக்க காலம் குறித்து.

 

‘‘பள்ளி நாட்களிலேயே ஒரு கையெழுத்துப்பிரதி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தேன். அதில் ஓவியங்கள் வரைய சிங்கார வேலர் என்கிற என் அண்ணன் இருந்தார். அந்த நூலை அழகுடன் கொண்டுவருவதற்கு அவர் ஒரு காரணம். அதில் நான் கட்டுரைகள், கதைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதினேன். அக்காலத்தில் கல்வித் துறை அமைச்சராக இருந்த அவிநாசிலிங்கம் ஐயா அவர்களின் பாராட்டைப்பெற்ற ஏடு அது.

அதன் பின்பு மாணவர் மன்றம் நடத்திய கவிதைப்போட்டிகளில் நான் தொடர் பரிசுகளை பள்ளி நாட்களிலேயே பெற்றிருக்கின்றேன். இவ்வாறு பள்ளி நாட்களிலேயே வளர்ச்சிக்கான அடையாளங்கள் என்னிடம் தென்பட்டன. அதை வளர்ப்பதற்கு உகந்த சூழ்நிலை என் குடும்பத்தில் இருந்தது.

எங்கள் தாயார் நன்கு தமிழ் கற்றவர். அவர் கற்ற, கற்று மற்றவர்களுக்கு போதித்த நூல்கள் எங்கள் வீட்டில் இருந்தன. எங்கள் அண்ணா நன்கு தமிழ் கற்றவர். என்னுடைய தாத்தா தமிழ் புலவராக விளங்கியவர், இந்த சூழலில் தமிழ் மீது பற்றும், தமிழை அறிந்துகொள்ள வேண்டுமென்ற அவாவும், முயற்சியும் இருந்தன. எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தவர் புலவர் மருத வாணனார், புலவர் அ.மா.பரிமளம், புலவர் குலசேகரன், புலவர் சிந்தாமணி ஆகியோர். இவர்கள் தலைசிறந்த தமிழ் ஆசிரியர்கள். இவர்கள்தான் என்னை பள்ளி நாட்களில் வளர்த்தவர்கள். இதுதான் என்னுடைய எழுத்தின் தொடக்க காலம்.’’

 

நவீனத்துவம், பின் நவீனத்துவம், பழைமைவாதம் இப்படியான எழுத்துக்களின் வகைமைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்.?

’’நான் பொதுவாக கவிதை எழுதுவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கிறேன். கவிதையில், மக்களைப் பற்றி எழுதுவது, மக்களுடைய வாழ்க்கையைப் பற்றி எழுதுவது, அன்றாடம் காண்கிற இயற்கையைப் பற்றி எழுதுவது, ஆகிய இப்படிப்பட்ட கோணத்தில்தான் எழுதுகிறேனே தவிர, இன்ன கோட்பாட்டு தடத்தில் கவிதை எழுத வேண்டும் என்று எனக்கு இல்லை. உலகின் தலைசிறந்த கவிஞர்களெல்லாம் கோட்பாடுகளை வைத்துக்கொண்டு கவிதை எழுதுவதில்லை. கோட்பாட்டிற்குள் வைத்து, வரையறைக்குள் வைத்து கவிதை எழுதுகிற முறையை அவர்கள் யாரும் செய்யவில்லை.

ஆகவே, நவீனத்துவம், பின் நவீனத்தும் ஆகியவையெல்லாம் என் கவிதையில் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆனால் கவிதையிருக்கிறது, அக்கவிதையில் நானிருக்கிறேன், நான் வாழும் காலமிருக்கிறது, என் மக்களுடைய கனவு, கண்ணீர், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், வெற்றி, தோல்வி எல்லாம் இருக்கின்றன. இவையெல்லாம் தான் என் கவிதையின் போக்குகளாகவும், நோக்குகளாகவும் இருந்துகொண்டிருக்கின்றன. இவையெல்லாம் அல்லாமல் ஒரு கோட்பாட்டை வைத்துக்கொண்டு நான் எழுதுவதில்லை.

உலகத்தின் தலைசிறந்த கவிஞன் பாப்லோ நெரூடாவை ஒரு முறை, கோட்பாட்டின் அடிப்படையில் கவிதை எழுதலாமா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் “முதலில், கவிதை எழுதுங்கள், பிறகு அந்தக்கவிதை எந்தக் கோட்பாட்டிலாவது இருக்கிறதா என்று பார்க்கலாம், கோட்பாடு அவசியமில்லை, மக்களுக்குப் பயன்படுகிற ரொட்டிபோல் கவிதை இருக்க வேண்டும். ரொட்டி என்பது, ஏழை-பணக்காரன்,  கொஞ்சம் படித்தவன்-அதிகம் படித்தவன், எல்லோருக்கும் ஒரு சேரப்பயன்படுவது போல, கவிதை என்பது, மக்களுக்குப் பயன்பட வேண்டும். மக்களுக்குப் புரிகின்ற மொழியில் எழுத வேண்டும்” என்று அவர் நினைத்தார்.

மக்களுக்குப் போக வேண்டாம் என்று நினைப்பவர்கள், புதிய முயற்சிகளையும், புரியாத கவிதைகளாகவும், அரூப கவிதைகளாக எழுதலாம். அவையெல்லாம் ஒரு பயிற்சி முறையில் வியக்கத்தக்கது என்றாலும், உண்மையான இலக்கியப் படைப்புக்கு உதவாது என்பது என்னுடைய கருத்து.’’

 

ஆரம்ப காலகட்டங்களில் கவிதைகளுக்கு இருந்த வரவேற்பு, தற்போது வெகுவாக குறைந்து வருவதாக சில பதிப்பகங்கள் குறிப்பிடுகின்றன. அப்படியெனில் வாசிப்பாளர்களிடத்தே கவிதைகளுக்கான வரவேற்பு அருகிவிட்டதா.?

‘‘இப்போதைய சூழலில் பதிப்பகத்தாரை நம்பி கவிதைகள் வெளிவருவதில்லை. பதிப்பகங்களை நம்பி நல்ல இலக்கியங்கள் வெளிவரும் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் பதிப்பகங்கள் எதை சந்தைப்படுத்தினால் பணம் சேருமோ, எதை சந்தைப்படுத்தினால் அதிக விற்பனையாகுமோ அதை பதிப்பிக்கத்தான் விரும்புவார்களேயன்றி, அவர்களுக்கு இலக்கியத்தை படைக்க வேண்டுமென்றோ, இலக்கியத்தை பரப்ப வேண்டுமென்றோ நோக்கம் கிடையாது. அவர்களுடைய முயற்சி வணிகம் சார்ந்தது. வணிக நோக்கத்திற்கு கவிதை உகந்தது அல்ல. அதற்கு உகந்ததாக சோதிடம், சாஸ்திரம், கைரேகை, போன்ற நூல்கள் இருந்தால் அவர்கள் மகிழ்வார்கள். அதை பல பேர் வாங்குவார்கள், வனிக நோக்கத்தில் வெற்றிபெற முடியும். எனவே கவிதைகள் பதிப்பகத்தாரை கடந்து இப்போது வளர்ந்துகொண்டிருக்கிறது.

கவிஞர்கள் தங்களுடைய உள்ளத்தை வெளிப்படுத்த வேண்டும், உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும், தங்களுடைய பதிவு.. காலம் குறித்த பார்வைகளை, பதிவுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவேதான் கவிஞர்கள் அதிகமாக இருக்கிறார்கள், உண்மையில் சொல்லப்போனால், சிறுகதை எழுத்தாளர்களைவிட, கட்டுரையாளர்களை விட, விமர்சகர்களைவிட, பாடலாசியர்களை விட அதிகமாக இருப்பவர்கள் கவிஞர்கள்தான். எனவே, கவிதையை யாரும் அழித்துவிட முடியாது.

 

எழுத்துகள் சமூக மாற்றத்திற்கான ஒரு கருவி என இருந்தது போய், எழுத்து எந்த நோக்கத்திற்கானதாகவும் இல்லை என பல எழுத்தாளர்கள் பதிவுசெய்கிறார்கள் அது குறித்து.

‘‘சமூக அக்கறையுள்ள எழுத்தாளர்கள், சமூக அக்கறையில்லாத எழுத்தாளர்கள், எதிலும் சாராத எழுத்தாளர்கள், ஏதேனும் ஒன்றை சாரந்த எழுத்தாளர்கள் என எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு சார்பு பற்றி எழுத நினைப்பவர்கள் அவர்களுடைய படைப்பை குறிப்பிட்ட லட்சியத்திற்காக படைக்கிறார்கள். சமூக மாற்றத்திற்கு கவிதை பயன்படும் என்று கருதுகிறவர்கள் அதற்கான படைப்பைப் படைக்கிறார்கள். சமூக மாற்றம் தேவையில்லை, என தனி மனிதனுடைய ஏக்கம், கவலை, துயரம், என இவற்றை எழுதினால் போதும் என்று நினைப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள்.

ஆனால், ஒரு படைப்பு என்பது சமூகம் படிக்கின்ற ஒன்றாக இருக்கும் போது, நிச்சயமாக அதற்கு ஒரு சமூக அக்கறையுண்டு. எழுதுகிறவன் தன்னுடைய எழுத்தை யாராவது படிக்க வேண்டும் என்று நினைத்தால் அவன் தன்னைத் தாண்டி சமூகத்திற்குத்தான் வருகிறான். எனவே, தான் எழுதியதை தானே படிக்க வேண்டும் என்று நினைக்கின்றவன், தான் எழுதியதை அச்சடிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், சமூக மாற்றத்துக்கான கனவு காண்கிறவர்கள், அதற்கான உந்து சக்தியாக கவிதையிருக்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில்தான் படைப்பை படைக்கிறார்கள்.

புரட்சியினை கவிதை ஒருபோதும் நிகழ்த்திவி்டாது, ஆனால் அதற்கான உந்து சக்தியாக கவிதையிருக்க முடியும். எனவேதான், லெனின்கூட ஒரு புரட்சிக்கு உந்து சக்தியாக கவிதை இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதேபோலவேதான் மாவோவும் நினைத்தார்.’’

 

சோவியத் இலக்கியம் குறித்தான உங்களுடைய பார்வை.

‘‘இப்பொழுது சோவியத் இலக்கியம் என்று ஒன்று கிடையாது. 1990 களில் சோவியத் உடைவதற்கு முன்பு, சோவியத் ஒன்றியமாக இருக்கும் பொழுது, மார்சியம், பொதுவுடமை என மக்கள் மத்தியில் இச்சிந்தனைகள் இருந்தபோது, அந்தக் காலங்களில் ஓர் இலக்கியம் உருவானது, ஆன்டன் செக்காவ், மார்க்சிம் கார்க்கி, டால்ட்ஸ்டாய் என இவர்களைக் கொண்ட இலக்கிய மரபெல்லாம் மாறிப்போய்விட்டது. இப்போது அந்தந்த மாநிலத்தை சார்ந்தவர்கள், அவர்களுடைய மொழியில் படைப்பை உருவாக்குகிறார்கள். இந்நிலையில் தங்களுடைய மொழியைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்கிற உணர்வுதான் சோவியத் உடைவதற்கு ஒரு காரணமாகும்.’’

 

உங்களை பெரிதும் ஈர்த்த புத்தகம் எது? எதனால்?

‘‘அப்படி ஒரு புத்தகத்தை மட்டும் என்னால் சொல்லிவிட முடியாது. காலம் கடந்தும் நீங்கள் படிக்கும் ஒரு புத்தகம் எது என்று கேட்டீர்களேயானால், நான் திருக்குறளை சொல்வேன். திருக்குறளின் மானுடப்பொதுமை. மானுட பொது வெளி, மானுட பொதுப்பண்பு, ஆகியவற்றை சொல்கிற ஒரு நூல் திருக்குறள். அது மனிதர் யாவரும் சமம் என்று கருதுகிற நூல். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என திருவள்ளுவர் சமயங்களுக்கு எதிராக, வைதீகத்திற்கு எதிராக வைத்து அந்தக் கருத்தை மிக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார். அந்தக் கருத்து உலகம் முழுமைக்கும் பொதுவான கருத்து என்பதினால், காலங்கடந்து, வாழக்கூடிய நூலாக திருக்குறள் விளங்குகிறது. காலங்கடந்து வாழக்கூடிய ஒரு நூலை நீங்ககள் விரும்ப நினைத்தால், அது திருக்குறளாகத்தான் இருக்க முடியும்.’’

 

உங்களின் தொடக்க காலத்திலிருந்து உங்களோடு பயணித்த உங்களால் மறக்க முடியாத எழுத்தாளர் யார். அவர் குறித்த நினைவுகளைப் பகிருங்களேன்.

‘‘என்னுடைய தோழர்கள் என்று சொன்னால் அப்துல் ரகுமான், இன்குலாப் இவர்கள் மிக முக்கியமானவர்கள். எனக்கு முன்னோடிகளில் நான் பழகிய நிலையில், கவிஞர் முடியரசன், கவிஞர் சுரதா, ஆகியவர்கள் முக்கியமானவர்கள். மரபுக் கவிஞர்களில் நீலமணி, முருகு சுந்தரம், போன்றவர்கள் முக்கியானவர்கள். புதுக்கவிதையில் பரபரப்பை உண்டாக்கிய நா.காமராசன் மறக்க முடியாத கவிஞர். இப்படி பலர் என்னுடைய நினைவில் இருக்கிறார்கள். பெயரிட்டுப் பட்டியலிட்டால் சிலருடைய பெயர்கள் விடுபட்டுப்போகும் அபாயம் இருக்கிறது என்பதால் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.’’

 

நவீன தொழி நுட்பங்கள் குவிந்துள்ள இக்காலகட்டங்களில், எமுத்தின் மீதான வாசிப்பு குறைந்துள்ளதாகக் கருதுகிறீர்களா..?

‘‘உலகத்தில் நூல் அச்சிடுவதும், விற்பனையாவதும் நின்றுவிடவில்லை. ஆனால், நவீன தொழில்நுட்பம் விஞ்ஞானம், வாழ்க்கை மாற்றம், இவையெல்லாம் மக்களைப் புத்தகங்கள் பக்கம் போக விடாமல் தடுக்கின்றன என்பது உண்மையே. ஆனால், இவற்றுக்கிடையில் இன்னும், புத்தகம் தேவைப்படுகிறது, படிக்காமல் இருக்க முடியாது என்கிற நிலையிருக்கிறது, எனவே, இந்தப் போராட்டம் எதன் பக்கமாக முடியும் என்று கேட்டீர்களேயானால், நிச்சயமாக இந்த முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தின் பக்கமாக போய் முடிந்துவிட முடியாது. எப்போதும் அறிஞர்கள் இருப்பார்கள், அறிஞர்களை விரும்புகிறவர்கள் இருப்பார்கள், அறிவு தாகமுடையவர்கள் இருப்பார்கள், புதுமையை விரும்புகிறவர்கள் இருப்பார்கள். எனவே, புத்தகங்கள் இருந்துகொண்டே இருக்கும்.’’

 

அண்மைக் காலமாக படைப்பாளிகள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் குறித்து.

‘‘இது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. கருத்து சுதந்திரம் என்பதைப் பறிப்பது ஒரு யதேச்சதிகாரமான பார்வை. அரசுக்கு மாறாக, மரபுக்கு மாறாக இருக்கிற நிலைக்கு மாறாக ஒரு கருத்தை சிந்தனையினடிப்படையிலும், தர்க்கத்தினடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையிலும் எடுத்து வைப்பதற்கு ஒரு படைப்பாளிக்கு முழு சுதந்திரம் உண்டு. அந்த சுதந்திரத்தை ஒடுக்குவதன் மூலம், சமூகத்தில் கருத்து வளர்ச்சியைத் தடை செய்துவிட முடியாது. கருத்து வளர்ச்சியைத் தடைசெய்யலாம் என நிகழ்த்தப்படுகிற செயல்களே கருத்து வளர்ச்சியைப் பல மடங்காக வளர்த்துவிடும் என்பதை அறியாதவர்கள்தான் இப்படிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள். எனவே, இவற்றைத் தாண்டி உண்மையான சுதந்திரமான எழுத்து சுதந்திரம் வென்றே தீரும். அடக்குமுறைகள் அழிந்திருக்கின்றன. சில கட்டுப்பாடுகள் கொண்ட நாடுகளில்கூட எழுத்தாளர்கள் கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். சிறைத் தண்டனை, தூக்குத் தண்டனை மரணத் தண்டனை எல்லாம் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் படைத்த இலக்கியங்களோ, அவர்கள் அறிமுகப்படுத்திவிட்டு சென்ற எழுத்து முறையோ, சமூகத்திற்கும் இலக்கியத்திற்கும் உள்ள உறவு இது என்று கருதி வகுத்துக்கொண்ட முறையோ, முக்கியமாகும். அந்த வகையில் இது ஒரு வகையான கொடுங்கோன்மை. இது ஒழிய வேண்டும். இதனை ஒழிக்க வெறும் எழுத்தாளர்கள் மட்டும் பாடுபட்டால் போதாது, எதை எழுத்தாளர்கள் எழுதுகிறார்களோ அதை நம்புகிற மக்கள், பின்பற்ற நினைக்கின்ற மக்கள், விரும்புகிற இளைஞர்கள், எல்லாம் ஒன்’று திரண்டு இந்தப் பாசிச மனப்பான்மைக்கு எதிராகக் கொடியுயர்த்தி, எழுத்தாளர் சுதந்திரத்தைப் பாதுகாப்போம் என சண்டையிட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.’’

 

சாகித்ய அகாதெமி குறித்த உங்கள் நிலைப்பாடு.

‘‘இந்திய அளவில் பெரிய விருது சாகித்ய அகாதெமி விருதுதான். குறைந்த தொகையிலிருந்து, இப்போது 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தொகை பெரிதல்ல. இதை உருவாக்கியவர் இந்தியாவினுயை முதல் பிரதமர், ஜவகர்லால் நேரு. அவருக்கு துணையாக இருந்த அன்றைய கல்வியமைச்சர், மௌலானா அப்துல்கலாம் ஆசாத் அவர்கள் உருவாக்கிய 31 இலக்கிய பீடம் அது. பரிசுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுப்பது, படைப்பாளிகளைத் தேர்ந்தெடுப்பது எல்லாம் படைப்பாளிகள் செய்கிறார்கள்.

தவிர, அதிகார வர்க்கத்தை சார்ந்தவர்கள் அதனுள் நுழைய முடியாது.  அது இந்திய எழுத்தாளர்கள் பேரவையாக இருக்கிறது. இப்போது 24 மொழிகளில் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பாடுபடுகிற ஒரு நிறுவனம். பரிசு கொடுப்பதில் சில குறைகள் நேரலாம் அது நிறுவனத்தின் குறைகள் அல்ல. நிறுவனத்தின் கோட்பாடுகளின், வரைமுறைகளின் குறைகள் அல்ல. இது மனிதர்கள் செய்கின்ற குறை. ஆகவே, இந்தியாவிலே மிகப்பெரிய இலக்கிய அமைப்பாக இருந்துவருகிறது சாகித்ய அகாதெமி. தொடர்ந்து புத்தகங்களை அது வெளியிடுகிறது. இவ்வாறு இலக்கிய வளர்ச்சிக்குப் பணி செய்கிற ஒப்பற்ற கிரீடம் அது.’’

 

தமிழை விட சமஸ்கிருதம்தான் தொன்மையான மொழியென பரப்பப்படும் பரப்புரை குறித்து.

‘‘இந்த பரப்புரை பொய்யானது. இது ஆராய்ச்சியின் அடிப்படையிலானது அல்ல, மொழியியல் அடிப்படையிலானது அல்ல. மாறாக இது நம்பிக்கையின் அடிப்படையிலானது, பற்றின் அடிப்படையிலானது, வெறியின் அடிப்படையிலானது என்று கூட சொல்லலாம். உலகத்தின் முதல் மொழியாக கருதத்தக்கது தமிழ்தான் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுக்க திராவிட மொழிகள்தான் பரவியிருந்தன. வட, மத்திய, தென் திராவிட மொழியென தேசம் முழுக்க பரவியிருந்தது. சிந்து சமவெளி பகுதியல் அவர்கள் பயன்படுத்திய பழைய சின்னங்களெல்லாம், கிடைத்திருக்கக் கூடிய சான்றுகளெல்லாம் தமிழர்களுடைய நாகரிகத்தைச் சார்ந்தது என்று அறிஞர்களால் சொல்லப்படுகிறது.

இப்படி தொன்மை வாய்ந்தது தமிழ்தான் என்று சொன்ன பிறகு, தமிழுக்கு இல்லாத மரபை சமஸ்கிருதத்திற்கு ஏற்றி இங்கிருப்பவர்கள் சிலரும், அவர்களுக்கு ஒத்திசைவாக வெளிநாட்டிலிருந்து வந்த பல அறிஞர்களும், எல்லோருமாக சேர்ந்து வட மொழியை உயர்த்திப்பிடித்து, தமிழெல்லாம் அதற்கு பின்னாள் வந்ததுதான் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அறிஞர்களுடைய கருத்து அப்படியில்லை. மிகத்தொன்மையான மொழி தமிழ்தான் என சொல்கிறார்கள். நாம் சொல்வதற்கு இந்திய அளவிலே குரல் எழுப்ப ஆள் இல்லை, ஆனால், சமஸ்கிருதத்திற்கு குரல் கொடுக்க பெரிய கூட்டமிருக்கிறது இந்தியாவில். அதற்கான பின்புலமாக சமயம் ஆண்மிகம், வர்ணாசிரமம், வேதம், கோயில், பூஜை, இவையெல்லம் இருக்கின்றன. தமிழுக்கு அப்படியேதும் இல்லாத காரணத்தால் தமிழினுடைய வலுவான தொன்மையை எடுத்து வைப்பதற்கு ஆட்கள் இல்லாத சூழ்நிலையாகவும், அப்படி சொன்னால் மேலோட்டமான கருத்துகளால் முறித்துவிடுகிற வல்லமையுடைய கைகளில் ஆதிக்கம் இருப்பதை நாம் கண் கூடாகப் பார்த்து வருகிறோம்.’’

 

ஈழ இலக்கியம் குறித்து.

‘‘நான் ஈழம் குறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். “என் அருமை ஈழமே” என்று. ஈழத்து போர் முடிகிற தறுவாயில் 2009-ல் அந்த புத்தகம் வெளியானது. ஏறத்தாழ காவிய அமைப்பிலான ஒரு நூல். தமிழில் முதன் முதலில் எழுதப்பட்டது என் அருமை ஈழமே என்று. அதற்கு முன்பு அங்கும் இங்குமாக தனிக்கவிதைகள் பற்றி எழுதிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஈழத்தைப்பற்றி முதன் முதலாக ஒரு காப்பிய வடிவில் உள்ள ஒரு நூலை நான் படைத்தேன். அந்த நூலில் ஈழத்துனுடைய வரலாற்றைப் படைத்தேன். ஈழத்து இலக்கியம் என்பது ஓர் தனியானது. ஈழத்தமிழ் இலக்கியம் அங்கிருக்கக்கூடிய படைப்பாளிகளால் செய்யப்படுகிறது என்று சொல்கிறபோது, மிகச்சிறந்த கதையாசிரியர்கள், மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்கள், மிகச் சிறந்த கவிஞர்களை எல்லாம் ஈழம் கொடையாகக் கொடுத்திருக்கிறது. ஆனால், ஈழத் தமிழ் இலக்கிய வரலாறு என்று இன்னும் தமிழ்நாட்டில் பரவலாகப் பரவவில்லை. ஈழத்தமிழ் இலக்கிய வரலாறு என்று ஒன்று உண்டு. தலைசிறந்த ஆராய்சியாளர்களான கைலாசபதி போன்றவர்கள் நிறைய பணி செய்து இருக்கிறார்கள். அவர்களுடைய தாக்கத்தினாலே தமிழ்நாட்டில் திறனாய்வு கலை வளர்ந்தது. சமூகத்திற்கு அப்பால் ஒரு வலுவான இலக்கியப் பாதை, ஈழத் தமிழ் இலக்கியப் பாதை. அவர்கள் தனித்துவமாகவே அதை வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.’’

 

 – ரா.கார்த்தி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *