- செய்திகள், வணிகம்

கவர்ச்சியை இழக்கிறதா ஆப்பிள் ஐ-போன்? முதல் முறையாக விற்பனையில் சரிவு

சான்பிரான்சிஸ்கோ, ஏப்.28:-
சர்வதேச  அளவில் கடந்த  9 ஆண்டுகளாக சக்கை போடு போட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்கள் விற்பனை  முதல் முறையாக கடந்த மார்ச் காலாண்டில் சரிவடைந்துள்ளது.

நிதி நிலை முடிவுகள்

கடந்த மார்ச்  காலாண்டு நிதி நிலை முடிவுகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 13  ஆண்டுகளில் முதல் முறையாக சென்ற காலாண்டில் அந்த நிறுவனத்தின் லாபம்  குறைந்துள்ளது. அந்த காலாண்டில் லாபம் 22.5 சதவீதம் குறைந்து 1,052 கோடி  டாலராக சரிவடைந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் லாபம் 1,357 கோடி  டாலராக இருந்தது.

கடந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் 13 சதவீதம் சரிந்து 5,055 கோடி  டாலராக குறைந்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் 65 சதவீதம் ஐ-போன்கள் விற்பனை மூலம் வந்துள்ளது.

5.12 கோடி ஐ-போன்கள்

2016 மார்ச் 26-ந் தேதியுடன் நிறைவடைந்த  காலாண்டில் 5.12 கோடி ஐ-போன்களை மட்டுமே ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே  காலாண்டில் இந்நிறுவனம் 6.12 கோடி ஐ-போன்களை விற்பனை செய்து இருந்தது. குறிப்பாக சீனாவில் ஐ-போன்கள் விற்பனை 25 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்காவுக்கு  அடுத்தபடியாக சீனா அந்த நிறுவனத்துக்கு பெரிய சந்தையாக விளங்குகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளதால், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளும் சிறப்பாக இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply