கவனத்தில் கொள்ளப்படாத கல்விக்கடன்கள்..!

ந்தியாவில் உயர்கல்வி முற்றிலுமாக வணிகம் என்று மாறிவிட்டபிறகு  அதற்கான பணத்தைக் கொண்டு கல்வி பயிலும் நிலைக்குத்தான் மாணவர்கள் தள்ளப்பட்டனர்.  அந்த வகையில் 2004-ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கான உயர் கல்விக் கடன் திட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்தது.  இதன் மூலம் சாதாரண மக்களின் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் உயர்கல்வி பயில்வதற்காக குறிப்பாக பொறியியல் கல்விக்கு இந்த கல்விக்கடன் திட்டம் ஓரளவு மாணவர்களுக்கு பயனைத் தந்தது.  ஆனால், இந்தியாவில் பெருகிவரும் வேலை வாய்ப்பின்மைக்கு பொறியியல் பட்டதாரிகளும் தப்பமுடியவில்லை.  லட்சக்கணக்கில் வங்கிகளில் கடனைப் பெற்று படித்து பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்கள் உரிய வகையில் வேலை வாய்ப்பில்லாத காரணத்தினால், வங்கிகளில் கல்விக்கடனாகப் பெற்ற தொகையைத் திரும்பச் செலுத்த முடியாத சூழல் உருவானது.  பொறியியல் படிப்பு படித்துவிட்டு வேலைக்குச் சென்றாலும் குறைந்த அளவே ஊதியம் என்கிற இன்னொரு வகையான தாக்குதலையும் பொறியியல் மாணவர்கள் எதிர் கொண்டனர்.  இந்த நிலை இவர்களுக்கு மட்டுமல்ல, உயர் கல்வி படித்து பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஏற்பட்டு வருகிறது.

வட்டி மானியம் என்கிற பெயரில் 2008-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.  அதன்படி கல்வி பயிலும் காலம் வரையில் வட்டி மானியத்தின் அடிப்படையில் வட்டி இல்லாக் கடனாக மத்திய அரசு 2008-ல் அறிவித்தது.  அதிலும் மாணவர்கள் பயன் அடைய முடிவதில்லை.  பெரும்பாலான வங்கிகள் தொடர்ந்து வட்டியை கட்டினால்தான் அடுத்த செமஸ்டருக்கான பணத்தை வழங்கியது. வட்டி மானியம் மாணவனின் வங்கிக் கணக்கில் நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் வரவு வைக்கப்பட்டது. மேலும் படித்தவுடன் வேலை கிடைக்காமல் தவிக்கும் மாணவர்கள் நிலை அறியாது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்ட சில் தனியார் வங்கிகள், வராக்கடனை வசூல் செய்ய தனியார் ஏஜென்சி மூலம் கடன் பெற்ற மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் அராஜக முறையைக் கையாளத் தொடங்கி உள்ளது.  ஏற்கெனவே வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருக்கும் மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் மிரட்டும் தொனியில் பேசி அடாவடித்தனமாக நடந்து கொண்டு கடனை வசூலிக்கும் முறையும் தற்போது தொடர்ந்து வருகிறது.  இதனால் பல இடங்களில் அவமானத்தை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலைக்கும் சென்று விடுகின்றனர்.

அண்மையில் மதுரையில் கட்டுமானத் தொழிலாளியின் மகன் ஒருவர், தான் பெற்ற கல்விக் கடனை கட்டமுடியாமல் இருந்துள்ளார்.  கடனை வசூலிக்கும் தனியார் ஏஜென்சியின் ஆட்கள் வீட்டிற்கே நேரில் வந்து கீழ்த்தரமான முறையில் பேசியுள்ளனர்.  மேலும் தொலைபேசி மூலம் தொடர்ந்து அந்த மாணவனை தொல்லைப்படுத்தியுள்ளனர்.  இவற்றை எதிர்கொள்ள முடியாத அந்த மாணவன் கடைசியில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துள்ளான்.  ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதிஅமைச்சர் கல்விக் கடன் தொடர்பாக யாரும் தற்கொலை செய்யவில்லை என்கிற தவறான தகவல்களைத் தந்துள்ளார்.  இது தொடர்பாக மக்களவையில் பேசிய நிதிஅமைச்சர் நடப்பாண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி கல்விக்கடன் வராத நிலுவைத்தொகை என்பது 75 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது என்றும் இதனைத் தள்ளுபடி செய்ய இயலாது எனவும் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நிலவும் பொருளாதாரச் சரிவு மற்றும் மந்தநிலையை ஓரளவு எதிர்கொள்ள வேண்டும் என்றால் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும் வகையில் வங்கிகள் கடன்களை வழங்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  ஆனால், அதற்கு மாறாக வேலையில்லாமல் அவதியுறும் மாணவர்களிடம் கல்விக் கடனை வசூலித்தே தீருவோம் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெருத்த ஏமாற்றத்தைத்தான் தருகிறது.  ரிசர்வ் வங்கியிடம் இருந்து 1.75 லட்சம் கோடி ரூபாயை எடுத்து விரல்விட்டு எண்ணக் கூடிய சில தொழில் அதிபர்களுக்கு தொழில் மேம்பாடு என்கிற முறையில் வழங்கியுள்ளது தற்போதைய மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் பணம் என்பது பொது மக்களின் பணமாகும்.  அதை தனியார் முதலாளிகள் பயன்படுத்தும் வண்ணம் இந்தியாவில் எந்த அரசும் இதுவரையில் செய்ததில்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரே கண்டித்துள்ளார்.  சில நூறு பேர் கொண்ட முதலாளிகளுக்காக கவலைப்படும் மத்திய நிதி அமைச்சகம், உயர் கல்வி கற்க வங்கிக் கடன் வாங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்ய மறுப்பது ஏமாற்றத்தைத்தான் வழங்குகிறது. அந்த மாணவர்களின் நிலை குறித்து அரசு அக்கறை கொண்டு கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வழிவகுக்க வேண்டும் என்பதுதான் மாணவ, மாணவியரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *