- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

கலக்கப் போவது தோனியா, மோர்தசா ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில்

மிர்பூர், மார்ச் 6:-
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இந்தியா இன்று களமிறங்குகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய 5 நாடுகள் பங்கேற்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோதின. இந்த லீக் ஆட்டங்களில் இந்திய தன்னோடு மோதிய பாகிஸ்தான், இலங்கை, வங்கேதசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அணிகளையும் வென்று 8 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்தது. வங்கதேசம் இந்தியா தவிர மற்ற நாடுகளை வெற்றி கண்டு 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தது. இதையடுத்து முதல் இரண்டு இடம் பிடித்த அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

ஆசிய கோப்பை இப்போதுதான் முதல் முறையாக 20 ஓவரில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தைப் பொருத்தவரை அந்த அணி இலங்கை, பாகிஸ்தான் போன்ற வலுவான அணிகளை இந்தப் போட்டியில் வெற்றி கண்டுள்ளது. மேலும் சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் அதுவும் ஒரு சாதகமான அம்சமாகும். ஆடுகளம் குறித்து நன்கு அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் தங்களது திறமையை நிரூபிக்க இது வாய்ப்பாக அமையும். அத்தோடு ரசிகள் ஆதரவும் கூடுதல் பலமாக திகழும்.

வங்கதேச அணியின் பேட்டிங்கில் சபீர் ரகுமான் சிறப்பாக உள்ளார். அவர் இலங்கைக்கு எதிராக 80 ரன் எடுத்து சிறப்பாக விளையாடியுள்ளார். தவிர முஸ்பிகுர் ரகீம், சகீப்–அல்–ஹசன், மகமதுல்லா, கேப்டன் மோர்தசா போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

ஆக வங்கதேச அணியை இந்திய அணி சாதாரணமாக எண்ணிவிட முடியாது. மேலும் இறுதிப் போட்டி வரை சென்றுவிட்ட அந்த அணி எப்படியும் வலுவான ஒரு அணியை வென்று பட்டத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற துடிப்பில் இருக்கும்.

இந்தியாவைப் பொருத்தவரை இந்த ஆண்டில் இதுவரை பங்கேற்ற 10 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இந்தியா 5 முறை ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

மேலும்உலக தரப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி 10 வது இடத்தில் உள்ள மேற்கு வங்கத்தை எதிர்கொள்கிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையைப் பொருத்தவரை கோலி, யுவராஜ் சிங், ரோகித் சர்மா, ஷிகர் தவான், கேப்டன் தோனி என திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அத்தோடு அஸ்வின், ஜடேஜா, பும்ரா, நெகி என பந்து வீச்சின் வரிசையும் நன்றாகத்தான் உள்ளது.

இந்தப் போட்டியில் பட்டம் வெல்வது இந்திய அணி தாயகத்தில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பட்டம் வெல்வதற்கு ஊக்கமாக அமையும் என்பதால் தங்களது மொத்த திறனையும் காட்ட முற்பாடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தோனி, யுவராஜ் சிங், விராட் கோலி போன்றவர்களுக்கு மிகப் பெரிய இறுதிப் போட்டியில் விளையாடி அனுபவம் உண்டு என்பதால் இந்தப் போட்டியில் விளையாடுவது பெரிய விஷயம் அல்ல. எனவே அவர்களால் எந்த வித பதற்றமும் இன்றி விளையாட முடியும்.
ஆனால், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா போன்றவர்கள் தேசிய அணிக்காக முதல் முறையாக இறுதிப் போட்டியில் களம் இறங்குகின்றனர். அதுவும் தாயக மண்ணில் என்றால் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனால் அந்நிய மண்ணில் களம் புகுந்து விளையாட உள்ளனர் என்பது சற்று மாறுபட்ட விஷயம்.

இந்தியாவைப் பொருத்த வரை துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் தவானும் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்துக்கு எதிராக இந்தியாவைப் பொருத்தவரை ரோஹித்தான் ஒரு நாள் போட்டியில் அதிகபட்சமாக 137 ரன்கள் எடுத்துள்ளார். கோலியைப் பொருத்தவரை இந்தப் போட்டியில் 4 ஆட்டங்களில் 2 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.
மொத்தத்தில் வங்கதேசத்தைவிட வலுவான நிலையில் உள்ள இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும், வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்ப்பு.

Leave a Reply