- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

கர்நாடகா புதிய அணைகள் கட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கு

சென்னை, ஏப்.12-
கர்நாடகாவில் புதிய அணைகள் கட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்த அனுமதிகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) உயர்நீதிமன்றத்தில் நடக்கிறது.

நீதிமன்றத்தில் மனு

திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மேகதாது, ராசி மணல் பகுதிகளில் சட்ட விரோதமாக கர்நாடக மாநிலம் அணை கட்ட இருப்பதை எதிர்த்து எங்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பாலைவனமாக மாறிவிடும்

கடந்த 28ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கர்நாடக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணை 3 வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் பூமி பூஜை போட்டு ஆரம்பக்கட்ட வேலைகளை அன்றைய தினமே தொடங்கியுள்ளது. இந்த அணைகளை கட்டுவதால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறி விடும்.
இதை எதிர்த்து கர்நாடக எல்லையான ஓசூர் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜூஜூவாடியில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு ஓசூர் இன்ஸ்பெக்டரிடம் கடந்த 4-ந் தேதி விண்ணப்பித்தோம். கிருஷ்ணகிரி போலீஸ் சூப்பிரண்டு அந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க இயலாது என்று  போனில் தெரிவித்து விட்டார். எனவே குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு இன்று (செவ்வாய்கிழமை) நீதிபதி ஆர்.சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply