- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

கரும்பு கொள்முதல் விலையை உடனே அறிவிக்க வேண்டும்

சென்னை, ஜன.11-
கரும்புக்கான கொள்முதல் விளையை உடனே அறிவிக்க வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–-

அணுகுமுறை

கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை இந்த ஆட்சியினர் கண்ணெடுத்துப் பார்ப்பதுமில்லை, காது கொடுத்துக் கேட்பதுமில்லை, கவலை கொள்வதுமில்லை. நானும், மற்றக் கட்சியினரும் இதுபற்றிப் பல்வேறு அறிக்கைகள் கொடுத்து இடித்துரைத்தும் பயன் ஏற்பட்டதில்லை.

கரும்பு விவசாயிகளைப் பொறுத்தவரை, தி.மு.க ஆட்சியில் எப்படிப்பட்ட ஆர்வத்தோடு ஆக்கப்பூர்வமான அணுகுமுறை பின்பற்றப்பட்டது என்பதையும், அ.தி.மு.க. ஆட்சியில் எப்படிப்பட்ட அக்கறையற்ற தன்மையோடு பின்னடைவான அணுகுமுறை பின்பற்றப்பட்டு வருகிறது என்பதையும், இரண்டு ஆட்சிக் காலங்களிலும் நடந்த நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே அடிப்படை உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம்.

பரிந்துரை விலை

இப்போது 2014-–15–-ம் ஆண்டுக்கு மத்திய அரசு ரூ. 2,200 என முதலில் நிர்ணயித்தது. ஆனால் அ.தி.மு.க. அரசோ வெறும் ரூ. 450 மட்டுமே சேர்த்து ரூ.2,650 தான் பரிந்துரை விலை என்று அறிவித்தது. இவ்வாறு, அ.தி.மு.க. அரசு பரிந்துரை விலையை நிர்ணயம் செய்த போது முதலில் ரூ. 650 என்றும், பிறகு ரூ.550 என்றும், அதன் பிறகு 2014-15–-ம் ஆண்டுக்கு ரூ. 450 என்றும் படிப்படியாகக் குறைத்து விட்டது.

2015-–2016-–ம் ஆண்டு கரும்புப் பருவத்திற்கு மாநில அரசின் பரிந்துரை விலையை, அ.தி.மு.க. அரசு இப்போதாவது முத்தரப்புக் கூட்டம் நடத்தி, அறிவித்திட வேண்டுமென்றும், தனியார் ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய மொத்தப் பாக்கித் தொகையையும் மேலும் காலம் தாமதிக்காமல் வழங்கிடச் செய்திடத் தேவையான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி  கூறியுள்ளார்.

Leave a Reply