- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

கருணாநிதியுடன் குலாம்நபி ஆசாத் சந்திப்பு தி.மு.க. – காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் இழுபறி

சென்னை, மார்ச் 26-
கருணாநிதியுடன் குலாம்நபி ஆசாத் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 50 இடங்கள் வரை கேட்பதால் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடிக்கிறது.

சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே, தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. கட்சிகளுக்கிடையே கூட்டணி அமைப்பது, போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல், தேர்தல் அறிக்கை தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் என அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களிள் தேர்தல் திருவிழா இப்போதே களைகட்டத்தொடங்கிவிட்டது.

தொகுதி பங்கீடு-பேச்சுவார்த்தை

இந்த தேர்தலில், தி.மு.க.வுடன் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்டகட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது.  தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியகட்சிகளுக்கு தலா 5 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கீடு செய்துள்ளது.
கருணாநிதி-ஆசாத் சந்திப்பு
இதையடுத்து கூட்டணியில் பிரதான கட்சியாகத் திகழும் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. முடிவு செய்தது. இதற்காக காங்கிரசுக்கு தி.மு.க. அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பபை ஏற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் ஆகியோரும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த நேற்று டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தனர்.
இருவரும் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு சென்றார். அவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் வந்தனர். அங்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசினர். காலை 11.45 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை 12.45 மணி வரை நீடித்தது.

50 தொகுதிகள்
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரசுக்கு 64 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கீடு செய்தது.   2011-ம் ஆண்டு தேர்தல் போல் அதிக தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்ய இயலாது என்று ஏற்கனவே தி.மு.க. தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.  இதை மனதில் வைத்தே காங்கிரஸ் தலைவர்களும் 40 முதல் 50 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுமாறு தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

முடிவாகவில்லை

ஆனால் தி.மு.க. தரப்பில் காங்கிரசுக்கு 30 முதல் 35 தொகுதிகளை மட்டுமே தர இயலும் என்று அக்கட்சியின் டெல்லி தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு டெல்லி தலைவர்கள் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே இந்த சட்டசபை தேர்தலில் 170 தொகுதிகளுக்கு குறையாமல்  போட்டியிட வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளதாக தெரிகிறது.
இந்தநிலையில், தி.மு.க.-காங்கிரஸ் இடையே நேற்று நடந்த பேச்சு வார்த்தை சுமூகமாக இருந்த போதும் தொகுதி பங்கீடு முடிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால்தான் தொகுதி எண்ணிக்கையை காங்கிரஸ் அறிவிக்கவில்லை. தொகுதி பங்கீட்டில் இழுபறிதான் நீடிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

சந்திப்புக்கு பிறகு குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
முடிவு எடுக்கப்படும்
தி.மு.க தலைவர் கருணாநிதியுடனான தொகுதி பங்கீடு  பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது. அது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். ஏற்கனவே பல கட்சிகள் கூட்டணியில் சேர்ந்துள்ளன. மேலும் பல சிறிய கட்சிகள் கூட்டணியில் சேர உள்ளதாக தி.மு.க.வில் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகே தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்படும்.
2வது கட்டமாக…

இப்போது காங்கிரசுக்கான தொகுதி எண்ணிக்கை உறுதி படுத்தவில்லை. தொகுதி பங்கீடு குறித்து கருணாநிதியிடம் பேசிய தகவல்களை எங்கள் கட்சியின் தலைமையிடமும், கட்சியின் மூத்த தலைவர்களிடமும் தெரிவிக்க உள்ளோம். அவர்களின் யோசனைபடி 2-வது கட்டமாக தி.மு.க.வுடன் பேசுவோம். இப்போது எங்களது அடிப்படை நோக்கமாக சட்டசபை தேர்தலில் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், தேர்தல் வியூகம் குறித்தும் இன்றைய சந்திப்பில் பேசி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
"இப்போது காங்கிரசுக்கான தொகுதி எண்ணிக்கை உறுதி படுத்தவில்லை. தொகுதி பங்கீடு குறித்து கருணாநிதியிடம் பேசிய தகவல்களை எங்கள் கட்சியின் தலைமையிடமும், கட்சியின் மூத்த தலைவர்களிடமும் தெரிவிக்க உள்ளோம். அவர்களின் யோசனைபடி 2-வது கட்டமாக தி.மு.க.வுடன் பேசுவோம்."

Leave a Reply