- செய்திகள், மாநிலச்செய்திகள்

கருணாகரனின் மகன், மகள் காங்கிரஸ் சார்பில் போட்டி கேரள முன்னாள் முதல்-அமைச்சர்

திருவனந்தபுரம், ஏப்.20-

கேரள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாகரனின் மகனும், மகளும் காங்கிரஸ் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர்.

முரளிதரன், பத்மஜா

மறைந்த கேரள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாகரன், அந்த மாநிலத்தின் ‘கிங் மேக்கரா’க விளங்கியவர். காங்கிரஸ் தொண்டர்களால் மரியாதையுடன் ‘லீடர்’ (தலைவர்) என்று அழைக்கப்பட்டவர், கருணாகரன்.

மே 16-ந்தேதி நடைபெற இருக்கும் கேரள சட்டசபை தேர்தலில் கருணாகரனின் மகன் கே.முரளிதரன், மகள் பத்மஜா வேணுகோபால் ஆகிய இருவரும் காங்கிரஸ் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.

மூன்று முறை எம்.பி.

கேரள மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவரான முரளிதரன், ஏற்கனவே தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற வட்டியூர்க்காவு தொகுதியிலும், அவருடைய தங்கை பத்மஜா, திருச்சூர் தொகுதியிலும் களம் இறங்கி உள்ளனர்.

கோழிக்கோடு தொகுதியில் மூன்று முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட 58 வயதான முரளிதரன், கடந்த சட்டசபை தேர்தலில், வட்டியூர்க்காவு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் செயரியன் பிலிப்பை 16 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தவர்.

2-வது தேர்தல்

இந்தத் தேர்தலில் முரளிதரனை எதிர்த்து, பா.ஜனதா சார்பில் அதன் மாநில தலைவர் கும்மணம் ராஜசேகரனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.என்.சீமாவும் போட்டியிடுகிறார்கள்.

55 வயதான பத்மஜா சந்திக்கும் 2-வது தேர்தல் இது. ஏற்கனவே கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முகுந்தபுரம் தொகுதியில் இவர் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

டிக்கெட் ஏன்?

தற்போது திருச்சூர் தொகுதியில் பத்மஜாவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வி.எஸ்.சுனில்குமார் போட்டியிடுகிறார். தங்கள் இருவருக்கும் தேர்தல் டிக்கெட் வழங்கப்பட்டு இருப்பது குறித்து கருத்து தெரிவித்த முரளிதரன், கருணாகரனின் பிள்ளைகள் என்பதற்காக தங்களுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை என்றார்.

‘‘நான் தற்போது அந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து வருவதால் எனக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக எனது தங்கைக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளராக பத்மஜா ஆற்றிய பணியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது’’ என்றும் முரளிதரன் கூறினார்.

Leave a Reply