- செய்திகள், மகளிர்

கரண்டி வழியே அன்பை பரிமாறுவோம்!

 

கோவிலுக்கு நிகரானது சமையலறை.  வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டின் தென் கிழக்கு பகுதியை ‘அக்னி மூலை’யாக இருக்கிறது.
உணவுக்கு தரும் அதே முக்கியத்துவத்தை அதை சமைக்கும் இடமான சமையலறைக்கும் தரவேண்டும்.
வெளிச்சமும், காற்றோட்டமும் நிறைந்த சந்தோஷத்தைத் தரக்கூடியதாக இருந்தால்தான் ஆரோக்கியம் அரவணைக்கும்.
மங்கலான ஒளியுடன், வியர்த்துக் கொட்டி,  மூச்சுத் திணறலோடு சமைக்கும்போது, ''ஐய்யோ சமைக்கனுமே…" என்ற வெறுப்புடன், செய்யும் உணவும் ருசிக்காது.
அதற்காகதான் இந்த மூலையை தேர்ந்தெடுத்தார்கள். கிழக்கிலிருந்து சூரிய வெளிச்சம் அறையில் ஊடுருவி, சமையலறை புகையை வெளியேற்றுவிடும்.

அன்பே அமுது!
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மட்டுமல்ல. சமைப்பவர்களின் மனமும் அந்த உணவில் பிரதிபலிக்கும். அன்போடு சமைக்கும் உணவு மட்டுமே சாப்பிட உகந்தது.
சமைக்கிறவர்கள், 'என் குடும்பத்தில் இருக்கும் என் அன்புக்குரியவர்களுக்காக இந்த உணவை தயாரிக்கிறேன்.  இந்த உணவு அவர்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரவேண்டும்’’ என்று நினைத்தபடி சமைத்தால், தயாரிக்கும் உணவில், கண்ணுக்கு தெரியாத நல்ல மாற்றம் நிகழும்.
ஹோட்டலில் ஒரு தோசைக்கு நம்மால் மேல் சாப்பிடமுடிகிறதா?  ஆனால், வீட்டில் 5 தோசை வெளுத்துக் கட்டுவோம்.  இதுவும், அன்பின் பரிமாற்றத்தால் வந்தது தான். ஹோட்டல் உணவு வயிற்றை நிரப்புமே தவிர, மனதை நிரப்பாது.

ஆரோக்கிய பழக்கம்!
அந்த காலத்துப் பழக்கங்கள் பலவற்றுக்கும் பல அற்புத காரணங்கள் உண்டு.
மாதவிடாய் காலங்களில் பெண்களை தீட்டு என்று ஒதுக்கி சமையலறைக்கு அனுமதிக்க மறுத்ததற்கு காரணம், அவர்கள் உடல், மன ரீதியான பிரச்னைகளோடு இருக்கும்போது, அவர்கள் சமைத்து, குடும்பத்தில் வீண் சச்சரவுகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக தான்.  ‘‘நல்லாவே இல்லை’’ என்றால்கூட, மனம் நொந்து போய்விடுவர்.
படுக்கையிலிருந்து நேராக சமையலறை போகாமல், குளித்து முடித்து கடவுளை பூசித்து சமைப்பது பாருங்கள்… அந்த ருசியே தனிதான்.  இரவு தூங்க செல்கையில், அடுப்பை நன்றாக துடைத்துவிட்டு செல்வதும், காலையில் அடுப்பின் அருகே கோலமிட்டு, வணங்கி கற்பூரம் ஏற்றி விட்டுதான் அடுப்பை மூட்டுவதும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

சமைத்து சாப்பிடுவதே உடற்பயிற்சி!
ஆயிரம் அறிவியல் முன்னேற்றங்கள் வந்தாலும், புது வீட்டுக்குப் போகும்போது, முதலில் பாலைக் காய்ச்சி குடிக்கும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளதுதான்.
வீட்டின் தரையில்தான் அடுப்பு இருக்கும். அடிக்கடி எழுந்திருந்து பொருட்களை எடுப்பதால் மூட்டுகளுக்கு நல்ல பயிற்சி கிடைத்தது. தரையில் அமர்ந்து சாப்பிடுவதும் கழுத்து, முதுகு, வயிற்றுக்கு பயிற்சி.  அம்மி, உரல் கை, கழுத்து, தோள்பட்டைக்குப் பயிற்சி.
இந்தியப் பெண்களுக்கு சமைப்பதே உடற்பயிற்சியாக இருந்ததால் தான் தனியாக உடற்பயிற்சி என்பது தேவையற்றதாக இருந்தது.  நவீன சாதனங்களே இந்த இயல்பான பயிற்சிகளை மறைய செய்துவிட்டது.

நோயின் பிடியில் சிக்காமல் இருக்க, பாரம்பரிய முறைகளை சிறிதேனும் கடைப்பிடிக்கலாமே!

Leave a Reply