- செய்திகள், வணிகம்

கரடியை வீழ்த்த காளைக்கு கை கொடுக்குமா? பணவீக்கம், பருவ மழை, தேர்தல் முடிவுகள்

புதுடெல்லி, மே 16:-

தொடர்ந்து 2 வாரங்களாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம் சென்ற வாரத்தில் எழுச்சி கண்டது. இந்த நிலையில், மொத்த விலை பணவீக்கம், பருவமழை, தேர்தல் முடிவுகள் இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

மொத்த விலை பணவீக்கம்

கடந்த ஏப்ரல் மாத மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் இன்று வெளியாகிறது. இது இன்றைய பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்த வாரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி, லுப்பின், ஐ.டி.சி. உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் வெளிவருகிறது.

அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமையன்று அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

தென்மேற்கு பருவமழை

இந்த ஆண்டில் பருவமழை சிறப்பாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்அறிவிப்பு செய்துள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்குவற்கான அறிகுறிகள் தென்பட ெதாடங்கி விட்டது. பருவமழை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் உணவு தானியங்கள் உற்பத்தி நன்றாக இருக்கும் என்பதால் மழை நிலவரமும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் காரணியாக இருக்கும்.

இது தவிர, அன்னிய முதலீட்டாளர்களின் நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, சர்வதேச நிலவரங்கள் போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சென்ற வாரம்

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சென்ற வாரத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 261 புள்ளிகள் அதிகரித்து 25,489.57 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 81 புள்ளிகள் ஏற்றம் கண்டு 7,814.90 புள்ளிகளிலும் நிலை கொண்டுள்ளன.

Leave a Reply