- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

கரடியை சமாளிக்குமா காளை? வருகிறது ரெயில்வே பட்ஜெட், பொருளாதார ஆய்வறிக்கை

புதுடெல்லி, பிப்.22:-
சென்ற வாரத்தில் நம் நாட்டு பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இந்நிலையில் இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் என்று நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.
பட்ஜெட் கூட்டத்தொடர்
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. வரும் வியாழக்கிழமையன்று ரெயில்வே பட்ஜெட்டை மத்திய ரெயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்ய உள்ளார். இந்த வாரத்தில் பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும், அடுத்த வாரம் திங்கட்கிழமையன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இவை குறித்த யூகங்களும், எதிர்பார்ப்புகளும் இந்த வார பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும்.
பொதுவாக மாதத்தின் கடைசி வியாழக்கிழமையன்று பங்கு முன்பேர கணக்கு முடிக்கப்படும். அந்த வகையில் வரும் வியாழக்கிழமையன்று முன்பேர கணக்கு முடிக்கப்படும் என்பதால் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நிலவரமும் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும்.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சீனா உள்பட சர்வதேச நிலவரங்களும் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அன்னிய முதலீட்டாளர்கள் நம் நாட்டு பங்குச் சந்தைகளில் தொடர்ந்து முதலீட்டை விலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 723 புள்ளிகள் உயர்ந்து 23,709.15 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 230 புள்ளிகள் அதிகரித்து 7,210.75 புள்ளிகளிலும் நிலை கொண்டுள்ளன.

Leave a Reply