- செய்திகள்

கமல்ஹாசனுக்கு சீமான் வாழ்த்து செவாலியே விருது…

சென்னை, ஆக.26-
‘செவாலியே’ விருது பெற உள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
‘செவாலியே’ விருது
பிரான்ஸ் அரசின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது தமிழினத்திற்கு மிகுந்த பெருமிதத்தையும் மகிழ்வையும் அளித்துள்ளது.
‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரால் பட்டை தீட்டப்பட்டு, 16 வயதிலே என்ற ஆகச்சிறந்த திரைக்காவியம் மூலமாக ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவால் தமிழ்த் திரையுலக கிரீடத்தின் வைரமாகப் பதிக்கப்பட்டவர். உலக நாயகன் கமல்ஹாசன்.
பிறவிக்கலைஞர்
அசலான மனித வாழ்க்கையைத் தமிழ்த்திரையுலகில் மறக்க முடியாத காவியங்களாக, செதுக்குகிற திரையுலகப் பிதாமகன்களில் முதன்மையானவர். காதலை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் மட்டுமல்லாது வறுமையின் நிறம் சிவப்பு, சத்யா, உன்னால் முடியும் தம்பி, அன்பே சிவம், மகா நதி போன்ற பல சமூக உணர்வை விதைக்கிற திரைப்படங்களின் அழுத்தமான முத்திரையை பதித்தவர். அவர் பிறவிக்கலைஞர்.
சீமான் வாழ்த்து
தமிழ்த்திரையுலகின் பெருமைக்குரிய அடையாளமாகத் திகழ்கிற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது கலைவாரிசாக நேசித்த உலக நாயகன் கமல்ஹாசனும் நடிகர் திலகம் பெற்ற அதே உயரிய செவாலியே விருதை பெறுவது சிறப்பிலும் சிறப்பு.
இந்த விருது இம்மண்ணில் திரைக்கலையை நேசித்து வாழக் கூடிய அனைத்துத்தமிழர்களுக்குமானது என்று நாங்கள் எண்ணி பெருமை கொள்கிறோம். உலக அரங்கில் தமிழ்த் திரையுலகைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற இம்மண்ணின் கலைஞன் கமல்ஹாசனை கட்டித்தழுவி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு சீமான் கூறி உள்ளார்.

Leave a Reply