- செய்திகள்

கன்னியாகுமரியில் புதிய தொழில் நுட்பத்தில் சாலைப்பணிகள் தொடக்கம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது…

கன்னியாகுமரி, ஆக.19-
கன்னியாகுமரி மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலைத்துறைசார்பில் புதிய தொழில் நுட்பத்துடன் மேற்கொள்ளப்படும் சாலை அமைப்புப்பணிக்கான தொடக்கவிழா பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது.

ரூ625 கோடி
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதான நெடுஞ்சாலைகளாக விளங்கும் தேசிய நெடுஞ்சாலை எண்.47 மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண்.47பி ஆகியவற்றை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த 2005-ல் முடிவு செய்யப்பட்டு 2008-ம் ஆண்டு பிரதான திட்ட அறிக்கை ஒப்புதல் செய்யப்பட்டு தனியார் பங்களிப்புடன் கூடிய பொது திட்டங்களுக்கான குழுவின் ஒப்புதலும் பெறப்பட்டது. இருப்பினும் கட்டுதல், செயல்படுத்துதல் மற்றும் மாற்றுதல் (பிஓடி-டோல்) திட்டமாக செயல்படுத்த தகுதி வாய்ந்த ஓப்பந்தகாரார்களிடமிருந்து போதுமான வரவேற்பு இல்லாத நிலையில் இந்த திட்டம் மறுவரையறை செய்யப்பட்டு ரூ.652 கோடிக்கு மேற்கண்ட குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இருப்பினும் ஒப்பந்தகாரார்களிடமிருந்து போதுமான வரவேற்பு இல்லை.
புதிய தொழில் நுட்பம்
இதனால் இத்திட்டத்தை மத்திய அரசு நிதியளிப்பின் திட்டமாக செயல்படுத்த முன் எடுத்து செல்லப்பட்டு 2015-ல்  மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது. இந்த திட்டப்பகுதியானது தேசிய நெடுஞ்சாலை எண்.47 ல் கேரளா/ தமிழ்நாடு எல்லையான காரோடில் இருந்த வில்லுக்குறி வரை மற்றும் வில்லுக்குறியிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் அத்துடன் தேசிய நெடுஞ்சாலை எண்.47பி-ல் நாகர்கோவிலிலிருந்து காவல்கிணறு வரையிலுமான மொத்தம் நீளமான 70.428 கி.மீ இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் புதிய தொழில்நுட்பத்துடன் முழுவதும் சிமெண்ட் கான்கிரீட் சாலையாகவும்; 28.440 கி.மீ அணுகு சாலைகள் தார்சாலைகளாகவும் அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தினை செயல்படுத்த லார்சன் டூப்ரோ (எல் அண்டு டி) நிறுவனத்துடன் 10.03.2016 அன்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. கட்டுமான பணிகளை 24 மாத காலங்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பணிகள் தொடக்கம்
இத்திட்டத்திற்கான பணிகள் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது இஸ்மாயில் பணிகளை தொடங்கிவைத்தார். விழாவில், முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன்.விஜயராகவன், ஜான் ஜேக்கப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply