- செய்திகள், விளையாட்டு

கனடாவை ‘தெறிக்கவிட்டது’ இந்தியா அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி

இபோ, ஏப். 11:-

மலேசியாவின் இபோ நகரில் நடந்துவரும் 25-வது சுல்தான் அஸ்லான் ஷா ஆடவர் ஆக்கிப் போட்டியின் லீக் ஆட்டத்தில் கனடா அணியை 1-3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது இந்திய அணி.

இதன் மூலம் 3 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய ஒரு தோல்வி, இரு வெற்றிகளுடன் 6 புள்ளியுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

3-வது நிமிடத்தில் சந்தனா திம்மையா கோல் அடித்து கணக்கை தொடங்கினார். அதற்கு பதிலடியாக 23-வது நிமிடத்தில் கனடா வீரர் கீகன் பெரீரா கோல் அடித்து சமன் செய்தார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

2-வது பாதியின் 41-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்ப்ரீத் சிங்கும், 67-வது நிமிடத்தில் தல்விந்தர் சிங் கோல் அடித்தனர். ஆனால், கனடா அணியால் அடுத்து எந்த கோலும் அடிக்க முடியாததையடுத்து, 1-3 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோல்வி கண்டது. நாளை நடக்கும் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி.

பாக் தோல்வி:

முன்னதாக, உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் அணி 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணியின் ஜேமி டேயர் 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். மேலும், அரன் ஜலேஸ்கி, கிறிஸ் சிரிலோ ஆகியோரும் கோல் அடித்தனர். லீக் சுற்றுகளில் இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலிய அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

நியூசி வெற்றி:

மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் அணியை 1-4 என்ற கோல் கணக்கில் துரத்தியது நடப்பு சாம்பியன் நியூசிலாந்து அணி. அந்த அணியின் சார்பில் நிக் வில்சன்(4-வதுநிமிடம்), கேப்டன் சிமன் சைல்ட்(13-வதுநிமிடம்), நிக் உட்ஸ்(27நிமிடம்), ஹூகோ இங்கில்ஸ்(68) ஆகியோர் கோல் அடித்தனர். இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றியும் 2 ஆட்டங்களை டிரா செய்து, 8 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது.

Leave a Reply