- செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில் 213 அவதூறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…

டெல்லி, ஆக.18-

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அரசியல் கட்சிகள், ஊடகங்களுக்கு எதிராக மொத்தம் 213 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
இடைக்கால தடை

தமிழக அரசு தம் மீது தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்கு தடை கோரி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் அவதூறு வழக்குகளுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இத்தடையை மீறி மற்றொரு அவதூறு வழக்கில் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோருக்கு எதிராக திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்த பிடிவாரண்ட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் தரப்பு முறையீடு செய்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், விஜயகாந்த், பிரேமலதாவுக்கு ஆகியோருக்கு எதிரான பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. அத்துடன் அவதூறு வழக்குகள் விவகாரத்தில் தமிழக அரசை  உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் எச்சரித்தது.

213 வழக்குகள்
குடிமக்களை காக்க வேண்டியது நீதிமன்றங்களின் கடமை. ஒரு அரசை விமர்சிப்பது என்பது அவதூறாகிவிடுமா? அவதூறு வழக்கின் பிரிவுகளை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்துவதா? எனவும் அப்போது சாடி அவதூறு வழக்கின் விவரங்களை 2 வார காலத்துக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனடிப்படையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கின் விவரங்களைத் தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில், 2011-16-ம் ஆண்டு காலத்தில் மொத்தம் 213 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பா.ம.க.வுக்கு எதிராக 9 வழக்குகளும், காங்கிரசுக்கு எதிராக 7 வழக்குகளும், பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக 3 அவதூறு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளதாக தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 21-ந் தேதி ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply