- செய்திகள்

கடந்த ஆண்டை விட அதிக துணிகளை விற்று கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் லாபத்துடன் செயல்படுகிறது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்…

சென்னை, ஆக.17-
கடந்த ஆண்டை விட அதிக துணிகளை விற்று கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் லாபத்துடன் செயல்படுகிறது என்று சட்டசபையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
சட்டசபையில் கைத்தறித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் பதில் அளித்து பேசியதாவது:-
ஜவுளிப்பூங்கா
நெசவுத் தொழிலில் சர்வதேசத் தரத்துடன் உள்கட்டமைப்பு வசதிகளை ஒரே இடத்தில் ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தில் 14 ஜவுளிப்பூங்கா 983 கோடியே 41 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைப்பதற்கு மத்திய அரசு 372 கோடியே 83 லட்சம் ரூபாயும், மாநில அரசு 74 கோடியே 44 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளன. மேற்கண்ட பூங்காக்கள் மூலம் சுமார் 1 இலட்சத்து 14 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
பூகோள குறியீடு சட்டத்தின் கீழ் இந்தியாவில் முதல் முறையாக காஞ்சிபுரம் பட்டு சேலைகளை உற்பத்தி செய்யும் 21 பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், 10 தனியார் பட்டு உற்பத்தியாளர்கள், கோவையைச் சேர்ந்த 60 கோரா காட்டன் சங்கங்கள்,  ஈரோடு சரகத்தை சார்ந்த 29 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் "பவானி ஜமக்காளம்" உற்பத்தி மேற்கொள்ளும் அங்கீகரிக்கப்பட்ட உபயோகிப்பாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், காரைக்குடி கண்டாங்கி சேலை, திருபுவனம் பட்டு மற்றும் கோடாலிக் கருப்பூர் சேலைகள் பூகோள குறியீடு சட்டத்தில் பதிவு செய்வதற்குத்தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோ-ஆப்டெக்ஸ்
கோ-ஆப்டெக்ஸ் இந்தியா முழுவதும் உள்ள 196 விற்பனை நிலையங்கள் மூலம் 2015-16-ம் ஆண்டில் 313 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகளை விற்பனை செய்து, இதுவரை இல்லாத அளவில் கடந்த ஆண்டை விட 7 கோடியே 87 லட்சம் ரூபாய் அதிகமாக விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 15.12.2014 அன்று தொடங்கப்பட்ட மின்வணிக தளம் மூலம் 1,741 எண்ணிக்கையிலான 53 லட்சத்து  73 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கைத்தறி துணிகளை விற்பனை செய்துள்ளது. 2015-16-ம் ஆண்டில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 573 கோடியே 91 லட்சம் ரூபாய் அளவிற்கு விற்பனை மேற்கொண்டு 2 கோடி ரூபாய் அளவிற்கு லாபம் ஈட்டியுள்ளது.
விற்பனை குறியீடு
2016-17 ஆம் ஆண்டில், புதிய டிசைன்களை உருவாக்குதல், புதிய ரகங்களை அறிமுகம் செய்தல், விற்பனை நிலையங்களை நவீனப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம்  கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 350 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை குறியீட்டை எய்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகமானது தற்போது மைய அரசின் திட்டங்களான திருச்சி மாபெரும் கைத்தறி குழுமத் திட்டம், விருதுநகர் மாபெரும் கைத்தறி குழுமத் திட்டம், விற்பனை ஊக்குவிப்பு திட்டம் போன்ற திட்டங்களுக்கு செயல்படுத்தும் முகமை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இக்கழகம் 2015-16-ம் ஆண்டில் 11 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

Leave a Reply