- செய்திகள், மாவட்டச்செய்திகள்

கச்சத்தீவை சுற்றி கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பதை தடுத்து நிறுத்தவேண்டும் மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்…

சென்னை, மே.14-
கச்சத்தீவைச் சுற்றி கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் இலங்கை அரசின் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
இது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கண்டனம்
இலங்கை அரசு கச்சதீவில் கடற்படை முகாம் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க திட்டமிட்டிருப்பதை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கச்சதீவு சம்பந்தமாக இலங்கையுடன் இந்தியா 1974-ம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழத்தில் அனைவரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கச்சதீவில் இலங்கை அரசு கடற்படை முகாம் அமைக்கவும், கச்சதீவை சுற்றி கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கவும் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதிர்ச்சி
ஏற்கனவே இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 34 மீனவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட 96 படகுகளும் இது வரை விடுவிக்கபடாமல் இருக்கும் நிலையில், இலங்கை அரசின் இந்த நடவடிக்கை வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் செயலாக  அமைந்துள்ளது.
மேலும் இந்த செய்தி தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
நிரந்தர தீர்வு
எனவே மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக இலங்கை அரசுடன் நேரடியாக பேசி இதனை தடுத்து நிறுத்தவும். கச்சதீவு பிரச்சினையை மறு பரிசீலனை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.

Leave a Reply