- செய்திகள், விளையாட்டு

ஓய்வு குறித்த கேள்வியால் தோனி எரிச்சல்

கொல்கத்தா, பிப்.22:-
ஓய்வு குறித்து தொடர்ந்து ஒரே கேள்வியை எழுப்புவதால் தன்னுடைைய பதிலில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் வரும் 24-ம் தேதி முதல் 20 ஓவர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியின் துவக்க ஆட்டத்தில் 24-ம் தேதி இந்தியாவும் வங்கதேசமும் மோதுகின்றன. இதில் பங்கேற்பதற்கான இந்திய அணி நேற்று வங்கதேசம் புறப்பட்டுச் சென்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார் தோனி.

அப்போது கூறிய அவர், ஒரு மாதத்துக்கு முன்போ அல்லது 15 தினங்களுக்கு முன்போ தான் என்ன கூறினேனோ அதை பதிலைத் தான் திரும்ப திரும்ப கூறுவேன் என்றும் வேறு பதில் எதையும் மாற்றிக் கூறமாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.

சில தினங்களுக்கு முன் பேசிய தோனி, இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசிய அவர், தன்னுடைய பெயர் என்ன என்று கேட்டால் எம்.எஸ்.தோனி என்றுதான் பதில் அளிப்பேன் என்றும் அதபோன்றுதான் இப்போதும் கூறுகிறேன், ஒரு குறிப்பிட்ட காலம்வரை விளையாடிவிட்டுதான் ஓய்வு பெறுவேன் என்றும் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக 2014-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது தோனி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்விகளை கேட்க சுதந்திரம் உள்ளது என்பதால் எல்லாவிதமான கேள்விகளையும் கேட்க உரிமை இல்லை என்றும் தோனி எரிச்சலுடன் குறிப்பிட்டார்.

`சௌரவ்- சச்சின் இணையின்

சாதனையை முறியடிப்போம்'

தானும் ரோஹித் சர்மாவும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி விளையாடுவதில் சௌரவ் கங்குலி-சச்சின் டெண்டுல்கரின் நீண்ட கால சாதனையை முறியடிப்போம் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய தவான், நீண்ட நாள்களாக தாங்கள் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி விளையாடி வருவதாகவும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். செளரங் கங்குலியும் டெண்டுல்கரும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி நீண்ட நாள்கள் விளையாடியுள்ளதாகவும் அதே போல் தாங்களும் விளையாடுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அவர்களைவிட அதிக நாள்கள் விளையாடி அவர்களின் சாதனையைக் கூட முறியடிப்போம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் தான் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அதே போல் ஆசியக் கோப்பை போட்டியிலும் சிறப்பாக விளையாடுவேன் என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக பேசிய ரோஹித் சர்மா தவான் கூறிய போல் டெண்டுல்கர்- கங்குலியை முறியடித்து சாதனை படைப்போம் என்று குறிப்பிட்டார்.

அப்போது உடனிருந்த தேசிய அணியில் முதல் முறையாக களம் இறங்க உள்ள பவன் நெகி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியாமல் பேசினார்.

தேசிய அணியில் இடம் பெற்று மிகப் பெரிய ஆட்டக்காரர்களுடன் இணைந்து விளையாடுவது பெரிய விஷயம் என்றும் இந்த நேரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் போட்டியில் பங்கேற்று விளையாடும் தருணத்துக்காக காத்திருப்பதாகவும் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என எல்லாவற்றிலும் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்வேன் என்றும் குறிப்பிட்டார்.

`புதிதாக இணைந்து ஆடுவதைவிட

மீண்டும் சேர்ந்து ஆடுவது கடினம்'

தேசிய அணியில் புதிதாக சேர்ந்து ஆடுவதைவிட ஒரு சமயத்தில் இடம் பெற்றுவிட்டு மீண்டும் வந்து ஆடுவது கடினமான ஒன்று என்று இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது நெஹ்ரா இந்திய அணிக்காக விளையாடினார். விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை. இந்தப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் நெஹ்ரா சேர்க்கப்பட்டுள்ளார். வேகப் பந்து வீசுவது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல என்றும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் நெஹ்ரா குறிப்பிட்டார்.

Leave a Reply